மணிப்பூர் கலவரம், உச்ச நீதிமன்றம் file image
இந்தியா

”3 மாதம்லா காத்திருக்க முடியாது; உடனே ரெடி பண்ணுங்க” - மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

Niranjan Kumar

இரு பெண்கள் பாதிக்கப்பட்டது தனி சம்பவம் அல்ல - நீதிபதி

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சூழலில் இரண்டு பெண்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில் மணிப்பூர் மாநில வன்கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ள மத்திய அரசு, வழக்கின் விசாரணையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.

அப்போது பேசிய தலைமை நீதிபதி, “மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமையை தனி ஒரு சம்பவமாக நாங்கள் பார்க்கவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த இரண்டு பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம். ஆனால், மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பிரச்சனையையும் பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கு ஆளான பல பெண்கள் புகார் அளிக்காமல் இருக்கின்றனர். புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் இவை எல்லாவற்றையும் விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார். மேலும், “பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து எத்தனை முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறீர்கள்” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இறந்தவர்களின் உடல்கள் கூட கொடுக்கப்படவில்லை - பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், “மணிப்பூர் காவல்துறையினர்தான் இரண்டு பழங்குடியின பெண்களையும் அழைத்துச் சென்று வன்முறை கும்பலிடம் விட்டு விட்டு சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவரது தந்தை மற்றும் சகோதரர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை அவர்களது உடல் கூட எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு தான் இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்பட்டது. பிறகு எப்படி எங்களுக்கு நம்பிக்கை வரும்? இங்கு எல்லாமே ஒரு தலை பட்சமாக இருக்கிறது. இது போன்ற ஏராளமான சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அரங்கேறியுள்ளது. அதனால் தான் நாங்கள் தனிப்பட்ட சுதந்திரமான விசாரணை அமைப்பை கோருகிறோம்” என வாதங்கள் முன் வைத்தார்.

மணிப்பூர் கலவரம்

பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங், “மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை மற்றும் அங்கு நிலவும் சட்ட ஒழுங்கு தொடர்பாக 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், பெரும்பாலானவற்றில் முழுமையான தெளிவான விளக்கங்கள் எதுவும் இல்லை. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை மீண்டும் மீண்டும் ஒரே விஷயம் குறித்து பேச வைப்பது என்பது அவர்களை மேலும் மன சிக்கலுக்கு ஏற்படுத்தும். முதலில் அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிபுணர்களை கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் இடம் பெறக்கூடியவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசி அறிக்கையை தயார் செய்வார்கள் அதற்குப் பிறகு இந்த விவகாரத்தில் ஒரு முடிவிற்கு வரலாம்” என வாதிட்டார்.

அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி, “அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த குழுவிடம் மட்டும்தான் பேசுவார்கள் என்றால் அது காவல்துறையினர் நடத்தும் விசாரணையை பாதிக்கும் வகையில் அமையாதா? பிறகு எப்படி குற்றவாளிகளை கண்டறிந்து விரைவான விசாரணையை மேற்கொள்ள முடியும்” என வினாவினார். தொடர்ந்து ஆஜரான மற்ற சில வழக்கறிஞர்களும் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அமைக்க வேண்டும், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், வீடுகள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீண்டும் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மணிப்பூர்

தொடர்ந்து ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், “குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களது பணியிடத்திலிருந்த போது வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் கூட இன்னமும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஒட்டுமொத்த குடும்பமும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்னும் முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை” என வாதங்களை முன் வைத்தார்.

அப்போது குறிப்பிட்ட அரசு தரப்பு வழக்கறிஞரான சோலிசிட்டர் ஜெனரல், “எந்த ஒரு இனத்தின் பெயரையும் குறிப்பிட்டு வாதங்களை முன்வைக்க வேண்டாம். அது ஏற்கனவே இருக்கும் வன்முறையை தூண்டுவதாக அகிவிடும்” என கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தொடர்ந்து பேசுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் கூட மோசமான நிலைமையில் உள்ளது. இவற்றையெல்லாம் கண்காணிக்க காவல்துறை கண்காணிப்பாளர்களை நீதிமன்றம் நேரடியாக நியமிக்கலாம்” என யோசனை கூறினர்.

மணிப்பூர் கலவரம்

அப்போது திடீரென ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், “மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. நாடு தழுவிய அளவில் பெண்களை பாதுகாக்க வேண்டும்” என கூறினார். அப்போது குறிப்பிட்ட தலைமை நீதிபதி, “நாம் தற்போது மணிப்பூர் மாநிலம் குறித்து விசாரித்து வருகிறோம். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு ஏற்பட்டது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டது தனி விவகாரம். அதனை தனியாக விசாரிக்க வேண்டும். நடக்கக்கூடாதது மணிப்பூரில் நடந்திருக்கிறது. அதை சரி செய்வது எப்படி என யோசனை சொல்லுங்கள்” என சற்று காட்டமாக கூறினார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு பல வாரங்கள் கழித்து மிக தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது ஏன்? இவ்வளவு மோசமான ஒரு செயல் நடந்திருக்கிறது, அருகில் உள்ள எந்த ஒரு காவல்துறையினருக்கும் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் போனது எப்படி? மணிப்பூரில் அவமானப்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள், காவல்துறையினரால் வன்முறை கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இது நிர்பயா போன்று சூழல் கிடையாது. ஆனால் இதுவும் மிக மோசமான ஒரு விஷயம்தான்” என கூறினார்.

”மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. அங்கு நிலைமையை உடனடியாக சீர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் இருப்பவர்களை அவர்களது வீடுகளுக்கு மீண்டும் குடியேற்ற வேண்டிய தேவை உள்ளது. அதே நேரத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்கவும் வேண்டி உள்ளது” என தலைமை நீதிபதி கூறினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “இவற்றிற்கெல்லாம் மூன்று மாதங்களாவது தேவைப்படும்” என கூறினார். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, “நமக்கு அந்த அளவிற்கு நேரமில்லை. ஏற்கனவே சாட்சியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. சரியான நேரத்தில் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்றால் அதற்குப் பிறகு விசாரணை நடத்துவது சிரமமாகிவிடும்” என்ற தனது கவலையை தலைமை நீதிபதி வெளிப்படுத்தினார்.

supreme court

“எங்களுக்கு நாளைக்குள் எத்தனை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு பேர் நீதிமன்ற காவலில் உள்ளனர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இந்த கால அவகாசம் போதாது என வழக்கறிஞர் கூறியபோது அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி நாளை கண்டிப்பாக வழக்கு விசாரிக்கப்படும் எனக்கூறி மதியம் 2 மணிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.