மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது, குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி நெஞ்சை பதறவைத்தது.
மேலும், இந்த வன்முறையின்போது பல வீடுகளும் கட்டடங்களும் தீக்கிரையாகின. பல்லாயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இந்தக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். எனினும், இன்றுவரை மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், "மணிப்பூரில் வன்முறையின்போது, ஆடைகள் இன்றி இழுத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும், சாலையில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, உதவி கேட்டுள்ளனர். எனினும், அந்தப் போலீஸார், வாகனத்தை எடுக்க சாவி இல்லை என்று கூறி, அந்தக் கலவரக் கும்பலிடமே அவர்களை வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பின்னரே, அவர்களை நிர்வாணமாக அந்தக் கும்பல் இழுத்துச் சென்றிருக்கிறது” என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது கூட்டு வன்கொடுமை, கொலை, குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: நேற்று கூகுள்.. இன்று டெஸ்லா.. தொடரும் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்!