மணிப்பூர் pt web
இந்தியா

மணிப்பூரில் வன்முறை.. ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு..!

ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மற்றும் சிறிய ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் என சமீப நாட்களில் கவலைக்குரிய வகையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது.

கணபதி சுப்ரமணியம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ள மாநில முதல்வர் பிரேன் சிங் மத்திய அரசுக்கு தகவல் அறிக்கை அனுப்பி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில், சனிக்கிழமை வெடித்த வன்முறையில் ஏழு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கு நபர்கள் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மூன்று நபர்கள் மெய்தி சமூகத்தைச் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மற்றும் சிறிய ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் என சமீப நாட்களில் கவலைக்குரிய வகையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் பிரேன்சிங் காவல்துறை அதிகாரிகள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அரசியல் ரீதியாக மாநில சட்டமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு பதட்டம் அதிகரித்துள்ள தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளார்.

பிரேன் சிங்

தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சண்டை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை பெருமளவு தணிந்திருந்த நிலையில், பதட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், டிரோன் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் மற்றும் சிறிய ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் ஆகியவை நடைபெற்றுள்ளதாக மணிப்பூர் அரசு கருதுகிறது.

இத்தகைய ஆயுதங்கள் போராட்டக்காரர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது மர்மமாக உள்ளது. பொதுவாக இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்த பயிற்சியும் தேவை. ஆகவே இந்த ஆயுதங்களை போராட்டக்காரர்கள் எங்கிருந்து கொண்டு வந்துள்ளனர் மற்றும் அவற்றை பயன்படுத்த அவர்களுக்கு பயிற்சி அளித்தது யார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

மணிப்பூர் அருகே உள்ள மியன்மார் எல்லை மற்றும் வங்கதேச எல்லை ஆகியவற்றில் ரோந்து பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என மணிப்பூர் அரசு கருதுகிறது. விரைவிலேயே மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய அரசு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.