மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்திருக்கும் மோதலுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. விஷ்ணுபுரம் மாவட்டம் கொய்ஜுமந்தாபி கிராமத்தில் இன்று (ஜூலை 2) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பதுங்கு குழிக்கு கிராமவாசிகள் காவல் காத்து வந்ததாகவும் அப்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கடும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து வருவதாகவும், விஷ்ணுபூர்-சூரசந்த்பூர் எல்லைப்பகுதியில் நடந்த வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அனைத்திற்கும் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பைரோன் சிங் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவரும் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இறுதியில், ”இந்த முக்கியமான தருணத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பின்னர் இதுகுறித்து பேட்டியளித்த பைரோன் சிங், “நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில்தான் இருந்தேன். ஆனால், எனது வீட்டின் முன்பு பெண்கள் உள்ளிட்ட பெரும் கூட்டம் எனக்கு ஆதரவாக நிற்பதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தேன். அவர்களை வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தபோது கடவுளுக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தேன். அதன் பிறகே எனது ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டேன்.
இந்தக் கலவரத்துக்கு நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா என, எனக்கு நானே பலமுறைக் கேட்டுக்கொண்டேன். இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்த என்னால் என்ன முடிந்ததோ அதை செயல்படுத்தியிருக்கிறேன். சட்டவிரோத அகதிகளை வெளியேற்றுகிறேன். கடத்தல்காரர்களை நான் மாநிலத்தைவிட்டு அப்புறப்படுத்துவதால் குக்கி சமூக மக்கள் என்னை அவமானப்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்தக் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டினரின் சதி இருக்கலாம். மணிப்பூர் மாநிலம், மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. சீனாவும் அருகில் உள்ளது. 398 கி.மீ., எல்லைகள் பாதுகாப்பற்றதாக உள்ளது. முன்களத்தில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும், அங்கு சிக்கல் உள்ளது. தற்போது மாநிலத்தில் நடக்கும் வன்முறையை பார்க்கும் போது, இவை அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதற்கான காரணம் தெரியவில்லை. இதனால் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை, உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர், ”மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரத்தில் சீனாவுக்கு பங்கு உள்ளது. சீனாவுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? வன்முறைக்குப் பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மெய்டீஸ் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இனத்தவர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தீ வைப்பு உள்ளிட்ட வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. இரண்டு மாத காலத்துக்கும் மேலாகக் கலவரம் நீடித்துவரும் நிலையில், கலவரங்களால் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அண்டை மாநிலங்களிலும், நிவாரண முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.