இந்தியா

“அடிக்காதீங்க இது என் மகள்தான்” - தந்தைக்கு நேர்ந்த கொடுமை

“அடிக்காதீங்க இது என் மகள்தான்” - தந்தைக்கு நேர்ந்த கொடுமை

webteam

மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் சென்றவரை, குழந்தைக் கடத்தும் நபர் என்று சந்தேகப்பட்ட மக்கள் தாக்கினர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கலீத் (30) என்பவர், நேற்று மாலை தனது 2 வயது மகளுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது குழந்தை எதையோ கேட்டு அடம்பிடிக்க, அதை கலீத் திட்டி, அடித்துள்ளார். இதனால் குழந்தை அழுதுள்ளது. இதை இருசக்கர வாகனத்தில் சென்றவர் இருவர் கண்டு, ஆட்டோவை மறித்துள்ளனர். அத்துடன் கலீத்தை வலுக்கட்டாயமாக ஆட்டோவைவிட்டு இறக்கி தாக்கத்தொடங்கியுள்ளனர்.

அப்போது கலீத் ஏன்? அடிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு “நீ இந்தக் குழந்தையை எங்கே, கடத்திச் செல்கிறாய். நீ குழந்தைக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் தானே” எனக்கூறி அடித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து மற்ற சிலரும் கலீத்தை தாக்கத்தொடங்கியுள்ளனர். இதையடுத்து கலீத், “அடிக்காதீங்க இது என் மகள்தான்” எனக்கூறியுள்ளார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தாக்கியுள்ளனர். 

இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கலீத்தை, தாக்குதல் நடத்திய கும்பலிடம் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் அந்தக் குழந்தை அப்பா என்று கலீத்தை பார்த்து அழுதுள்ளது. காவல்துறையினர் கலீத் தான் அந்தக் குழந்தையின் அப்பா என்பதை உறுதி செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், யார்? முதலில் தாக்குதலில் ஈடுபட்டீர்கள் எனக் கோவமாக கேட்டுள்ளனர். ஆனால் அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர். பின்னர் வாட்ஸ் அப் வதந்தியால் யாரையும் தாக்கதீர்கள், அப்படி தாக்கினால் கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.