இந்தியா

3 குழந்தைகளையும் விஷம்வைத்து கொலை செய்துவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட பெண்!

3 குழந்தைகளையும் விஷம்வைத்து கொலை செய்துவிட்டு, தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட பெண்!

சங்கீதா

குடும்பச் சண்டையில் 3 குழந்தைகளுக்கு உணவில் விஷம் வைத்துக்கொலை செய்த இளம்பெண், பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மடூர் டவுனில் உள்ள ஹோலே பீடி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் அகீல் அகமது - உஸ்னா கௌசர் தம்பதி. கார் மெக்கானிக்காக வேலைப் பார்த்து வருகிறார் அகீல். அவரின் 30 வயதான மனைவி உஸ்னா கௌசர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிப்புரிந்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களுக்கு 7 வயதில் ஹாரிஸ் என்ற மகனும், 4 வயதில் ஆலிசா மற்றும் 2 வயதில் ஃபாத்திமா என்ற மகள்களும் இருந்தனர். குழந்தைகள் இருந்த நிலையிலும் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்றிரவு உணவில் விஷம் கலந்து அதனை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார் உஸ்னா கௌசர். விஷம் கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் 3 பேரும் உயிரிழந்தநிலையில், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் உஸ்னா கௌசர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் அகீலுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததை அறிந்த உஸ்னா கௌசர், அதுகுறித்து கேட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டை எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த உஸ்னா கௌசர் குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்து, அவரும் விபரீத முடிவை எடுத்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மடூர் டவுன் காவல்துறையினர், அகீலை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.