இந்தியா

சபரிமலையில் நிறைவுபெற்ற மண்டல பூஜை காலம்: 'ஹரிவராசனம்' பாடி நடை அடைப்பு!

சபரிமலையில் நிறைவுபெற்ற மண்டல பூஜை காலம்: 'ஹரிவராசனம்' பாடி நடை அடைப்பு!

webteam

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 42 நாட்கள் மண்டல பூஜை காலம் முடிந்ததை அடுத்து ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் இந்த ஆண்டு மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் மட்டும் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலையின் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு முன்னோடியாக தங்க அங்கி ஊர்வலம் நடந்தது. மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பத்து நந்திட்டா ஆறுமுகம் பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த 23ஆம் தேதி புறப்பட்டது.

இதையடுத்து 26 ஆம் தேதி சபரிமலை சன்னிதானம் வந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மறுநாள் 27ஆம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கும் 01.00 மணிக்கும் இடையே மீன ராசியில் உள்ள சுப முகூர்த்தத்தில் திரளான பக்தர்களின் சரண கோஷம் முழங்க நடந்த மண்டல பூஜை நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் வழக்கமான பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து நடை அடைப்பிற்கு முந்தைய அபிஷேகம் மற்றும் சடங்குகள் நடந்தன. தொடர்ந்து சங்கு இசை முழங்க, நம்பூதிரிகள் ஹரிவராசனம் பாட, 42 நாட்கள் மண்டல பூஜைக்காலம் முடிந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி நடை திறக்கப்படும். இதையடுத்து 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து, வழக்கமான பூஜைகள் மற்றும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் வழிபாடு என மகர விளக்கு பூஜைக்காலம் முடிந்து ஜனவரி 20 ஆம் தேதி நடை சார்த்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.