இந்தியா

இந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி 

இந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி 

webteam

இந்திய ரூபாய் நோட்டை மந்திரம் மூலம் அமெரிக்க டாலர்களாக மாற்றி தருவதாக கூறிய வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் கம்லூ- நையா- அலைன் (Kamleu-Nya Alain). இவர் டெல்லியின் நொய்டா பகுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று நொய்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இந்திய ரூபாய் நோட்டுகளை மந்திரம் மூலம் அமெரிக்க டாலர்களாக மாற்றி தருவதாக கூறியதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக நொய்டா காவல்துறை எஸ்பி வினீத் ஜெய்ஷ்வால்,“அலைன் ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரது பாஸ்போர்ட் ஏற்கெனவே டெல்லியின் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் உள்ளது. இவர் மீது ஒருவர் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். அதாவது புகார் அளித்த நபரிடம் இருந்து அலைன் 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று அமெரிக்க டாலர்களாக மாற்றி தருவதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அலைன் அந்த நபரிடம் வெறும் வெள்ளை காகிதங்களை கொடுத்து கோசடி செய்துள்ளார். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இது அமெரிக்க டாலர்களாக மாறி விடும் என்று அலைன் தெரிவித்துள்ளார். 

எனினும் இரண்டு மணிநேரம் ஆகியும் அந்தக் காகிதங்கள் அமெரிக்க டாலர்களாக மாறாததால் அந்த நபர் எங்களிடம் புகார் அளித்தார். இதனையடுத்து நாங்கள் அலைன் மீது வெளிநாட்டவர் சட்டம் மற்றும் ஐபிசி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தோம். அத்துடன் அவரைத் தேடி வந்தோம். இறுதியில் நேற்று அலைனை நொய்டா பகுதியில் பிடித்தோம். அவரிடம் இருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும் சில கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.