நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படத்தில் வரும் பஞ்சவன் பாரிவேந்தன் (எ) கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரம், சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படமாகும். இந்த சோனம் வாங்சுக், தற்போது பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை வைத்துள்ளார்.
அதில் அவர், “ஆல் இஸ் நாட் வெல் இன் லடாக் (லடாக்கில் எந்த விஷயமும் நன்றாக இல்லை)” என்று குறிப்பிட்டுள்ளார். நண்பன் படத்தை பொறுத்தவரை, கொஸக்ஸி பசப்புகழ் கதாபாத்திரத்தில் வரும் விஜய், `ஆல் இஸ் வெல்’ என அடிக்கடி சொல்வார். இதுவும், சோனம் வாங்சுக்கின் நிஜ வாழ்க்கையை ஒட்டிய விஷயம் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, அவரேவும் `ஆல் இஸ் நாட் வெல்’ என சொல்லியிருப்பது, கூடுதல் அதிர்ச்சியை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம். சோனம் வாங்சுக் அப்படி என்னதான வீடியோவில் பேசியிருக்கிறார்? இதோ:
“உடனடியாக இங்கு (லடாக்கில்) உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், லடாக்கிலுள்ள தொழிற்சாலைகள், சுற்றுலா மற்றும் வணிகம் யாவும் முடிவுக்கு வரக்கூடும். காஷ்மீரி பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வுகளின் முடிவில், உடனடியாக லடாக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் லடாக்கின் பனிப்பாறைகள் இன்னும் சில வருடங்களில் மூன்றில் இரண்டு பங்கு உருகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காஷ்மீரி பல்கலைக்கழக ஆய்வின் தகவல்களின்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் மனிதர்கள் வாழும் பகுதியையொட்டிய இடங்களிலெல்லாம் மிக வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா மட்டுமே காலநிலை மாற்றத்தால் விளையும் அபாயங்களுக்கு பொறுப்பல்ல. நாமும் பொறுப்புதான். ஆகவே நம்மை சுற்றியுள்ள மாசு மற்றும் ரசாயன வெளியேற்றங்களில் நாமும் கவனமாக இருக்க வேண்டும். லடாக் போன்ற இடங்களில், குறைவான அளவே மனிதர்கள் நடமாட்டம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான், இங்குள்ள பனிப்பாறைகள் சேதமாகாமல் இருக்கும்.
ஆகவே பிரதமர் மோடியிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். லடாக் மற்றும் இமாலய மலைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இவையாவும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாகும். அரசு மட்டுமன்றி, மக்களும் இவ்விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
லடாக்கிலுள்ள 95% பழங்குடியின மக்கள், இப்பகுதியை அரசியலமைப்பின் 6-வது பிரிவின் கீழ் கொண்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்” என்றுள்ளார்.
இதுதொடர்பாக அரசுக்கு மேலும் தெரியப்படுத்தும் நோக்கத்தில், சோனம் வாங்சுக் ஜனவரி 26 முதல் கர்தங்கலா பாஸ் என்ற இடத்தில் 5 நாட்களுக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த இடம், 18,000 அடி உயரத்தில், மைனஸ் 40 டிகிரி செல்ஷியஸில் இருக்கும்.