இந்தியா

’மட்டன் சூப்’ ஜூலி முகத்தில் துணியை அகற்றியவர் கைது!

’மட்டன் சூப்’ ஜூலி முகத்தில் துணியை அகற்றியவர் கைது!

webteam

மட்டன் சூப் கொடுத்து, 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜூலியின் முகத்தை மறைத்த துணியை அகற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாயி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூலி தாமஸ். ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜுலி. ஜூலியின் குடும்பத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பலர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஜூலியின் மாமியார் அன்னம்மாவில்(2002) தொடங்கிய இந்த மர்ம மரணம், மாமனார் டாம் தாமஸ்(2008), கணவர் ராய் தாமஸ்(2011), அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ(2014) என தொடர்ந்தது. ஜூலி மாமனாரின் அண்ணன் மகன் சாஜூவின் மனைவி சிலி மற்றும் அவரது 10 மாத பெண் குழந்தை 2016இல் உயிரிழந்தனர்.


தொடர்ச்சியான இந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே 2017ஆம் ஆண்டு ஜூலியும் சாஜுவும் திருமணம் செய்து கொண்டனர். அப்போதுதான், டாம் தாமஸின் இளைய மகனுக்கு சந்தேகம் எழுந்தது. போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

ஜுலி குடும்பத்தில் உள்ளவர்கள் இரவு உணவுக்குப்பின் சூப் சாப்பிடுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி அனைவரையும் கொலை செய்ய ஜூலி திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொலைகள் அனைத்தையும் சொத்துக்காகவும் தான் விரும்பிய சாஜூவை திருமணம் செய்வதற்காகவும் ஜூலி நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. மட்டன் சூப்பில் சயனைடு கலந்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளார். இந்த சீரியல் கொலை தொடர்பாக ஜூலியை கைது செய்து, கேரள சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஜூலியை மருத்துவ பரிசோதனைக்காக கொயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் முகத்தை துணியால் மூடி போலீசார் அழைத்து சென்றனர். அவரைப் பார்க்க அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர், அவர் முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றினார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், கன்னஞ்சேரியை சேர்ந்த சாஜூ என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு போலீசார், கைது செய்தனர்.