நிகித் ஷெட்டி freepik, x page
இந்தியா

”அந்த ட்ரெஸ் உனக்கு சரியில்ல.. மீறினா ஆசிட் ஊத்துவேன்” - மிரட்டிய இளைஞர்.. நிறுவனம் கொடுத்த ஷாக்!

Prakash J

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர், நிகித் ஷெட்டி. இவர், பெண் ஒருவர் உடுத்திவந்த ஆடையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவிர, அந்தப் பெண்ணுக்கு சோஷியல் மீடியா மூலம் முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டி அச்சுறுத்தி உள்ளார். இதை, அந்தப் பெண் தன் கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரான சபாஷ் அன்சார், நிகித் ஷெட்டி பற்றிய பதிவுகளுடன் போலீசில் புகாரளித்தார். மேலும், இதுதொடர்பாக சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், “இந்த நபர் எனது மனைவியின் ஆடை தேர்வு குறித்த விஷயத்தில் தலையிட்டு அவரது முகத்தில் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும்முன்பு இந்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பதிவிட்டு இருந்தார். அதேபோல் இன்னொரு பதிவில், “எனது மனைவி மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டல்விடுத்த நபர், குறிப்பிட்ட அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்ற கேள்வி எழுகிறது'' எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன் நிகித் ஷெட்டியின் லிங்க்ட்இன் பக்கத்தின் ஸ்கிரின்ஷாட்டையும் அவர் பகிர்ந்திருந்தார். இதையடுத்து நிகித் ஷெட்டி மீது, அவர் பணியாற்றும் நிறுவனம் அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அவரை, பணியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

இதையும் படிக்க:வங்கதேசம் | பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம்.. காளி கோயிலில் திருட்டு.. போலீஸ் விசாரணை!

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட பதிவில், “எங்கள் ஊழியர்களில் ஒருவரான நிகித் ஷெட்டி செய்த ஒழுக்கக்கேடான செயலால் வருத்தமடைகிறோம், அவர் மற்றொரு நபரின் ஆடைத் தேர்வு குறித்து அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதை, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது, எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும், நிறுவனத்தில் பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலை வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ளோம். அந்த வகையில் அவர்மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர், பணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது செயல்களுக்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்" எனப் பதிவிட்டுள்ளது.

நிகித் ஷெட்டி வேலையைவிட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாஷ் அன்சார், அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனது மனைவி மீது ஆசிட் ஊற்றுவதாக கூறிய நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த நபர் மீது அவர் பணியாற்றிய நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: PAK Vs ENG|ஒரே டெஸ்ட் போட்டி.. கதகளி ஆடிய இரு இங்கிலாந்து வீரர்கள்.. பல சாதனைகள் படைத்த ஹாரி புரூக்!