குடிநீர், உணவு இல்லாமல் மீனவர் ஒருவர் 5 நாட்களாக மூங்கில் கட்டையை பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்துள்ளார். பங்களாதேஷைச் சேர்ந்த கப்பல் ஒன்று அந்த மீனவரை காப்பாற்றியுள்ளது
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மீனவர் ரபீந்திரநாத் தாஸ். இவர் தனது நண்பர்கள் 14 பேருடன் சேர்ந்து கடந்த ஜூலை 4ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். கடலின் அசாதாரண சூழலில் சிக்கிய அவரது படகு கவிழ்ந்தது. இதனையடுத்து எரிபொருள் கேன்களை மூங்கில் கட்டைகளுடன் இணைத்துக் கட்டி மிதவையை ரபீந்திரநாத் தயார் செய்துள்ளார்.
ஆனால் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடைசியாக மூங்கில் கட்டையை பிடித்துகொண்ட ரபீந்திரநாத்தும், அவரது மருமகனும் 5 நாட்களாக உயிருக்காக போராடியுள்ளார். கடைசியாக உயிருக்கு போராடிய ரபீந்திரநாத்தைக் கண்ட பங்களாதேஷைச் சேர்ந்த கப்பல் மாலுமிகள் அவரை மீட்டுள்ளனர். அவர் தற்போது கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பேசிய ரபீந்திரநாத், ''படகு கவிழ்ந்ததும் தண்ணீரில் குதித்தேன். 5 நாட்களாக நான் எதுவும் சாப்பிடவில்லை. மழையும் பெரும் அலையும் மிரட்டியது. மழை பெய்யும் போது அந்த தண்ணீரைக் குடித்துக்கொண்டேன். எனது மருமகனும் நானும் ஒன்றாகவே மிதந்து கொண்டிருந்தோம்.
லைப் ஜாக்கெட்டை நான் அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் மிகவும் பயந்து போயிருந்தார். ஒரு நாள் முழுவதும் அவரை என் தோளில் தாங்கினேன்.ஆனால் நான் காப்பாற்றப்படுவதற்கும் சில மணி நேரத்துக்கும் முன்பாக அவரும் மூழ்கி போனார்'' என்று தெரிவித்துள்ளார்.