குஜராத் சம்பவம் ட்விட்டர்
இந்தியா

போலீஸ் வாகனத்தை திருடி செல்ஃபி... அடுத்த 6 மணி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்..!

குஜராத்தில் ஒருவர், போலீஸ் வாகனத்தையே திருடிச் சென்று, செல்ஃபி எடுத்துப் பதிவிட்டதுடன், போலீஸுக்கே டஃப் கொடுத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

இந்தியாவில் வாகனங்கள் திருடுபோவது அடிக்கடி நிகழக்கூடியவை. அதிலும் அரசு மற்றும் காவல் துறை வாகனங்களே திருடுபோவது சமீபகால பேசுபொருளாக உள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலம் துவாரகாவில் காவல் துறைக்குச் சொந்தமான வாகனத்தை ஒருவர் திருடிச் சென்றிருப்பதுதான் தற்போதைய ஹாட் நியூஸ்.

model image

துவாரகா நகரின் காவல் துறைக்குச் சொந்தமான மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) வாகனம் ஒன்று, கடந்த டிச.28ஆம் தேதி ஸ்டேஷன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்ட நபர், ஒருவர் அந்த வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். காரில் முழு அளவு டீசல் இருந்ததால், அவர் காரை எங்கும் நிறுத்தவில்லை. சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் சென்றுள்ளார். அதற்குள் அந்தக் காரைவைத்து செல்பி எடுத்து இணையத்தில் பதிவு போட்டுள்ளார்.

இதற்கிடையே இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், அன்றைய நாள் மதியம் 2.30 மணிக்குள்ளேயே அவரைப் பிடித்துவிட்டனர். அதாவது கார் திருடுபோய் 6 மணி நேரத்திற்குள் அவரைப் பிடித்துவிட்டனர். விசாரணையில், அவர் பெயர் மோகித் சர்மா எனத் தெரியவந்துள்ளது. துவாரகாவில் உள்ள கோயிலுக்குத் தன் குடும்பத்தினருடன் சாமி கும்பிட வந்த அவர், அதன்பிறகு போலீஸ் ஸ்டேஷன் காரை எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோகித் சர்மா மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தவிர, அவருக்கு போதைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கமும் இருக்கிறதாம். இதனால், அவர் போதையில் காரை ஓட்டிச் சென்றாரா அல்லத் கொள்ளையடிக்கும் நோக்கில் காரை எடுத்துச் சென்றாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சாரப் பேருந்து ஒன்று காணாமல் போய், பின்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.