இந்தியா

4 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை

4 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை

Sinekadhara

ஹைதராபாத்தில் 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கடை ஊழியருக்கு 30 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

2018ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி கிரானா ஸ்டோருக்கு ஷாம்பு வாங்கிவர தனது 4 வயதை மகளை அனுப்பியுள்ளார் ஒரு பெண். கடைக்குச் சென்று 20 நிமிடங்களுக்கு மேலாகியும் மகள் திரும்பி வராததால் பதற்றமடைந்த தாயார், மகளைத் தேடி ஸ்டோருக்குச் சென்றுள்ளார். அங்கு விசாரித்ததில் மகள் அவர்களுக்குத் தெரிந்த திப்பு என்பவருடன் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து திப்புவின் வீட்டிற்கு சிறுமியின் தாயார் சென்றபோது, சிறுமி சத்தமிட்டு அழும் சத்தம் கேட்டுள்ளது. திப்பு சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதை உள்ளே சென்ற தாயார் நேரில் பார்த்துள்ளார்.

திப்புவிடம் இருந்து சிறுமியை மீட்ட அவர், ஜூபிலி ஹில்ஸில் உள்ள காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்த புகாரின்பேரில் திப்பு கைது செய்யப்பட்டார். 12 வயதுக்கு கீழுள்ள சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றத்திற்காகவும், கடத்திய குற்றத்திற்காகவும் அவர்மீது போக்சோ, ஐபிசி 354 மற்றும் 363 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

தற்போது அந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் கூடுதல் செஷனல் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன், குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கூடுதல் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இதுதவிர ரூ.12 ஆயிரம் அபராதமாக செலுத்தவேண்டும் எனவும், அப்படி செலுத்தாவிட்டால் சிறை தண்டனை மேலும் 12 மாதங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.