இந்தியா

டெல்லி வன்முறையில் துப்பாக்கியை நீட்டி போலீசாரை மிரட்டும் இளைஞர் - வீடியோ

டெல்லி வன்முறையில் துப்பாக்கியை நீட்டி போலீசாரை மிரட்டும் இளைஞர் - வீடியோ

webteam

டெல்லியில் வன்முறை வெடித்த பகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் காவல்துறையினரிடம் சிக்கினார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.

அப்பகுதியில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின

இந்நிலையில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றபோது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார். காவல்துறையினரையும் அவர் மிரட்டினார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் ஷாரூக் என்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபரை பிடித்து டெல்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கியை நீட்டி போலீசாரை மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் சர்வசாதாரணமாக துப்பாக்கியை பயன்படுத்துவது சமூகத்திற்கே ஆபத்தானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.