இந்தியா

‘ஆம்புலன்ஸில் ட்ரிப்ஸ் உடன் தந்தை’: திருமணத்தை முடிக்க இளைஞர் போட்ட மாஸ்டர் பிளான்..!

‘ஆம்புலன்ஸில் ட்ரிப்ஸ் உடன் தந்தை’: திருமணத்தை முடிக்க இளைஞர் போட்ட மாஸ்டர் பிளான்..!

jagadeesh

உத்தரபிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஊரடங்கு காலத்தில் போலீஸ் கண்ணில் மண்னை தூவிவிட்டு, தந்தையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிவிட்டு தன் திருமண நிகழ்வுக்காக டெல்லி சென்று மீண்டும் சொந்த ஊருக்கும் திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாடு முழுவதும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1074 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளன. சில இடங்களில் குறைந்த அளவிலான உறவினர்களுடன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநிலங்கள் இடையிலான எல்லைகள் மூடப்பட்டுள்ள, காரணத்தால் வேறு மாநிலங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தடைகளை தகர்த்து, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெல்லி சென்று பெண் ஒருவரை கரம்பிடித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்தவர் அகமது. இவருக்கும் டெல்லியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கில் எப்படி டெல்லி வரை சென்று திருமணம் செய்வது என்று எண்ணி அகமது கடும் யோசனையில் இருந்துள்ளார். இறுதியில் அவருக்கு ஓர் யோசனை உதித்தது. அதாவது தன் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அந்த ஆம்புலன்ஸ் உள்ளே தந்தைக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவது போல "செட் அப்" செய்து டெல்லி சென்றுள்ளார் அகமது. வெற்றிகரமாக டெல்லி சென்று திருமணத்தையும் முடித்த அந்த இளைஞர் தனது மனைவியுடன் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கும் திரும்பியுள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, அகமதை விசாரித்த போலீஸார் இந்த விவரங்களை தெரிந்துக்கொண்டது. அப்போது, கடந்த வாரம் இதேபோன்றதொரு முயற்சி செய்து அதில் தோல்வியடைந்ததாகவும், ஆனால் இம்முறை முயற்சியில் வெற்றிப் பெற்றதாகவும் கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட முசாபர்நகர் போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.