டெல்லியில் சர்வதேச விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணி புரிபவர் ரீட்டா (பெயர் மாற்றம்). இவர் தன்னுடைய திருமணத்துக்கு மேட்ரிமோனி இணையதளத்தில் தன் விவரங்களையும், குடும்ப பின்னணிகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த 29 வயதான வசந்த் என்பவர் ரீட்டாவை தொடர்புக் கொண்டு பேசியுள்ளார். இவர் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போய் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்பு இருவரின் திருமண நிச்சயதார்த்தமும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், ரீட்டாவின் வாழ்வில் திடீரென திருப்பம் ஏற்பட்டது. ரீட்டாவின் செல்போன் அழைப்புகளை வசந்த் திடீரென துண்டிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் ரீட்டாவுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு நாள் ரீட்டாவின் பெற்றோர்கள் "உன்னுடைய திருமண நிச்சயதார்த்தம் நின்றுவி்ட்டது, இனி நீ அந்தப் பையனுக்கு கால் செய்து தொந்தரவு செய்யாதே" என கூறியுள்ளனர்.
பின்பு, சில நாள்கள் கழித்து சில தெரியாத நபர்களிடம் இருந்து ரீட்டாவுக்கு செல்போன் அழைப்புகள் வந்துள்ளது. அந்த அழைப்புகள் அனைத்தும் ரீட்டாவை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் நபர்களாகவே இருந்தனர். சிலர், உங்களின் விலை என்ன என்று கூடு கேட்டு இருக்கிறார்கள். பின்பு, விசாரித்ததில்தான் தெரிந்தது ரீட்டாவின் புகைப்படமும், அவரது தொலைப்பேசி எண்ணும் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்ப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியானார் ரீட்டா.
ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ரீட்டாவின் புகைப்படங்கள் அனைத்தும், வசந்த் அனுப்பியது என தெரிய வந்துள்ளது. பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ரீட்டா. இதனையடுத்து வசந்த் குஞ்ச்சை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் வசந்த் "நான் ரீட்டாவை கல்யாணம் செய்ய ஒருபோதும் விரும்பியதில்லை. ரீட்டாவுடன் டேட்டிங் செல்லவே விரும்பினேன். ஆனால் பிரேக் அப் சொன்ன பின்பும் கூட, ரீட்டா என்னை தொந்தரவு செய்தார், அதனால்தான் இவ்வாறு செய்தேன்" என தெரிவித்தார். இந்நிலையில் ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்த ரீட்டாவின் விவரங்கள் அனைத்தையும் போலீஸார் துரிதமாக செயல்பட்டு நீக்கிவிட்டனர்.