இந்தியா

3வயது சிறுமி பாலியல்வன்கொடுமை செய்து கொலை: பாலியல் வழக்கில் பரோலில் வந்தவர் செய்த கொடூரம்

3வயது சிறுமி பாலியல்வன்கொடுமை செய்து கொலை: பாலியல் வழக்கில் பரோலில் வந்தவர் செய்த கொடூரம்

JustinDurai

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி பரோலில் வந்த நபர், 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக கைது செய்யப்படுள்ளார்.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் பென் பகுதியில் 3 வயதான சிறுமி தனது பெற்றோருடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த குடிசையில் கதவுகள் இல்லை எனக் கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் குடிசைக்குள் புகுந்து சிறுமியை வெளியில் மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அப்போது சிறுமி வலியால் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து இறந்த சிறுமியின் உடலை மீண்டும் குடிசைக்குள் போட்டுவிட்டு செல்ல வந்தபோது, சிறுமியின் பாட்டி இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். உடனே சிறுமியின் உடலை வீசியெறிந்துவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றார். இதுகுறித்து ராய்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள், உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்டோர்  குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆதேஷ் பாட்டீல் என்ற 35 வயதான நபர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததை கண்டறிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றஞ்சாட்டபட்ட ஆதேஷ் பாட்டீல் மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கு, வீட்டை உடைத்தல், திருட்டு, தாக்குதல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் ஆதேஷ் பாட்டீல் பரோலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ராய்காட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வைஷாலி பாட்டீல் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரிடம் பேசினார். குற்றவாளிக்கு எதிரான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றும், நிர்பயா வழக்கில் வழங்கப்பட்டதைப் போலவே குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றும் கோரினார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி பரோலில் வந்த நபர், 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.