இந்தியா

துரத்திய காட்டு யானை... மயிரிழையில் உயிர் பிழைத்த இளைஞர் - ஏன் இந்த அலட்சியம்?

துரத்திய காட்டு யானை... மயிரிழையில் உயிர் பிழைத்த இளைஞர் - ஏன் இந்த அலட்சியம்?

ஜா. ஜாக்சன் சிங்

கர்நாடகாவில் வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற இளைஞரை காட்டு யானை துரத்தியுள்ளது. இதில் அந்த இளைஞர் மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கிறார்.

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது பண்டிபூர் தேசிய வனச் சரணாலயம். புலிகள் காப்பகமாக விளங்கும் இந்த வனப்பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் வாகனங்களை வழியில் நிறுத்த வேண்டாம் என்றும், வனத்தை நின்று வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கையும் செய்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி வாகனங்களை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க செல்வது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் யானைகள், புலிகள் மனிதர்களை தாக்கும் சம்பவமும் பண்டிப்பூரில் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று பண்டிபூர் நெடுஞ்சாலையில் 4 இளைஞர்கள் காரில் சென்றுள்ளனர். வழியில் அவர் காரை நிறுத்திவிட்டு வனத்தை வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று சத்தமாக பிளிறிக்கொண்டு அவரை தாக்குவதற்காக ஓடி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து ஓடினார். ஆனால், யானை விடாமல் துரத்தியது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அவரது நண்பர்கள் காரில் ஏறிவிட்டனர். பின்னர், அந்த இளைஞரும் அடித்து பிரண்டு ஓடி வந்து நகர்ந்து செல்லும் காரில் ஏறி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அலட்சியம் வேண்டாம்

இதுகுறித்து பண்டிபூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட காரின் பதிவு எண்ணை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்திருக்கிறோம். வனப்பகுதியில் அலட்சியமாக செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். வனப்பகுதியை பொறுத்தவரை, விலங்குகளுக்கு நாம் தொந்தரவு கொடுக்க கூடாது. அப்படி செய்தால் அவை நம்மை தாக்கிவிடும். இதன் காரணமாகவே, வனப்பகுதி அருகே வாகனங்களை நிறுத்த வேண்டாம்; வாகன விளங்குகளை ஒளிர விட வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். ஆனால், சிலர் இந்த விதிமுறைகளை மதிக்காமல் செயல்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்" என்றார்.