’புகை உடலுக்குப் பகை’ எனச் சொல்லப்படுவது உண்டு. புகையினால் கொடுமையான நோய்கள் ஏற்பட்டு அதனால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலரும் புகைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில், இளம்பெண் ஒருவர் சிகரெட் பிடித்ததை உற்றுப் பார்த்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள மகாலஷ்மி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ பஞ்சாடே. இவரது தோழி சவிதா சாயர். இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இரவு, பான் கடை ஒன்றுக்கு வெளியே புகைபிடித்தப்படி இருந்துள்ளனர். அந்தச் சூழலில் அக்கடைக்கு ரஞ்சித் ரத்தோட் என்பவர் சிகரெட் வாங்க வந்துள்ளார். அப்போது பெண்கள் இருவரும் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை உற்றுப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி? சீனா போடும் திட்டம்.. மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை!
இதனால் கடுப்பான ஜெயஸ்ரீ, ரஞ்சித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், சிகரெட் புகைத்துக்கொண்டே, புகையை ரஞ்சித் மீது விட்டுள்ளார். இதனால், இளம்பெண்களுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது ரஞ்சித்தை தாக்குவதற்காக ஜெயஸ்ரீ, தனது நண்பரான ஆகாஷ் என்பவரை செல்போனில் அழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த ஆகாஷ், ரஞ்சித்தை எதிர்கொண்டு பலமுறை கத்தியால் குத்தியுள்ளார்.
ஜெயஸ்ரீ தனது நண்பர்களை வரவழைத்ததை அடுத்து, கடையை மூடிவிட்டு கடையின் உரிமையாளர் லக்ஷ்மன் தாவ்டே வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் முக்கிய சாட்சியான கடை உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஜெயஸ்ரீ, சவிதா, ஆகாஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.