கைது செய்யப்பட்டவர் pt web
இந்தியா

கேரளா | மக்களின் பணத்தேவையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உடலுறுப்பு திருட்டு... இடைத்தரகர் கைது!

PT WEB

செய்தியாளர் பாலவெற்றிவேல்

இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபடும் கும்பலின் இடைத்தரகர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிர வைக்கும் இந்த வர்த்தகத்தில் தொடர்புடைய இடைத்தரகருக்கும் தமிழ்நாட்டில் சிலருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

30 வயதாகும் சபித் நாசர், மே 19ஆம் தேதி ஈரானில் இருந்து நாடு திரும்பிய நிலையில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சர்வதேச அளவில் உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட புகாரில் சபீத் நாசரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. அதன்படி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 20 பேரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ஈரானுக்கு அழைத்துச் சென்றதாக சபீத் நாசர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2019 முதல் 2024 வரை உறுப்பு தானம் செய்வது சட்டப்பூர்வமானது என்று மக்களை நம்ப வைத்தும், சிலரது பணத் தேவையை சாதகமாக பயன்படுத்தியும், ஈரானுக்கு அழைத்துச் சென்றதாக சபித் நாசர் கேரள காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கும் தனக்கு 5 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும், ஒவ்வொரு உறுப்பு கொடையாளருக்கும் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்ததாகவும் சபீத் கூறியுள்ளார். இதில் ஒரு கேரள மருத்துவருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் சபீத் கூறியுள்ளார். இவர் தனது நெட்வொர்க்கை, ஹைதராபாத் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விரிவாக்கி, ஏஜெண்டுகள் மூலம் உறுப்பு தானம் வழங்குவோரை அடையாளம் கண்டதாகக் கூறியுள்ளார்.

உடல் உறுப்புகள் விற்பனை மூலம் இவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கேரளாவின் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட சபித் நாசருக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல இடைத்தரகர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், கேரளா காவல்துறை கூறுகிறது. கேரள காவல்துறையின் சிறப்புக்குழு தற்போது கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் விசாரணையை தொடங்கியுள்ளது.