இந்தியா

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

webteam

பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைத்து இரண்டு பெண்களை 32 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து தெற்கு பெங்களூர் லேஅவுட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் ஜெய்சங்கர் என்பது தெரியவந்துள்ளது. குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை வெளிவரும் வரை, அவர் எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் நிலையத்திற்குள் ஒரு அறையில் தனிமைப்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுப்ரமண்ய நகரில் வசிக்கும் இவர், மார்ச் மாதம் உறவினரைச் சந்திக்க மும்பைக்குச் சென்றிருந்தார். வியாழக்கிழமை ஜெய்ங்கர் மும்பையிலிருந்து திரும்பி வந்து எச்.எஸ்.ஆர் பிரிவு 4 அரசு விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்துக்கு மாற்றப்பட்டார். 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் "ஜெய்சங்கர் ஒரு தனியார் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக வேலை பார்க்கிறார். இவர் ஒரு பொதுவான குளியலறைக்கு அருகில் 30 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதேபோல் 22 வயது பெண்ணை அவரது அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தனர். 

30 வயதான பெண்ணின் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் மும்பையிலிருந்து திரும்பி வந்து தனது ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்காக விடுதியில் தங்கியிருப்பதாக காவல்துறை புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.