கர்நாடகா - கலெக்டரிடம் திருமண கோரிக்கை வைத்த இளைஞர் முகநூல்
இந்தியா

கர்நாடகா | திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நபர்!

PT WEB

செய்தியாளர் - ம.ஜெகன்நாத்

கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவில் உள்ள ஏ.பி.எம்.சி., சமுதாய பவனில், மக்கள் குறை தீர் முகாம் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் நலின் அதுல் உட்பட உயர் அதிகாரிகள், பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். சில அடிப்படை வசதிகள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. சில பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

கர்நாடகா - கலெக்டரிடம் திருமண கோரிக்கை வைத்த இளைஞர்

அக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது சங்கப்பா என்ற வாலிபர், மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். தொடர்ந்து, மைக்கை வாங்கி அவர், “நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். திருமணம் செய்து கொள்வதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக, எனக்கு பெண் தேடி வருகிறேன். ஆனால், ஒரு பெண் கூட, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு பெண் பார்த்து கொடுக்க வேண்டும். அரசு சார்பில், விவசாய பிள்ளைகளின் திருமணத்துக்காக சிறந்த திட்டம் வகுக்க வேண்டும். இதன் மூலம், விவசாய பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற உதவ வேண்டும்” என பேசினார்.

கர்நாடகா - கலெக்டரிடம் திருமண கோரிக்கை வைத்த இளைஞர்

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகள், சட்டென சிரித்தனர். பின், அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.