பீகார் Facebook
இந்தியா

ரூ.52 லட்சம் மின்கட்டணமா? ஷாக் ஆன நபர்! பீகாரில் நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் ஒருவருக்கு ரூ.52 லட்சத்துக்கும் அதிகமான மின்கட்டணம் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பீகார் மாநிலத்தில் ஒருவருக்கு ரூ.52 லட்சத்துக்கும் அதிகமான மின்கட்டணம் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசார்பூரில் வசித்து வருபவர், ஹரிசங்கர் மணியாரி. இவர் Medical Representative ஆக பணியாற்றி வருகிறார். கடந்த ஜுன் 27-ஆம் தேதி ஹரிசங்கரின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது என இவரின் மகன் தெரிவித்துள்ளார். ஆகவே, மின்இணைப்பை திரும்பப் பெற, 500 ரூபாய் ரீசார்ஜ் செய்துள்ளார். இருப்பினும் வீட்டிற்கு மின் இணைப்பு திரும்பி வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, மின்சார கட்டணம் என்னவென்று சோதித்துள்ளார் மணியாரி. அப்போதுதான் 52,43,327 ரூபாய் மின்கட்டணத் தொகையாக வந்துள்ளது மணியாரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து, அருகில் இருந்த மின்சார வாரியத்தை நாடி இது குறித்து புகார் அளித்துள்ளார்.

பின்னர் இது குறித்து பேசிய மணியாரி,”ஜூன் 27-ம் தேதி எனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து எனது மகன் கூறியதும், உடனடியாக எனது மின் கணக்கிற்கு ரூ.500 ரீசார்ஜ் செய்தேன். ஆனால், மீண்டும் மின்சாரம் வரவில்லை. பிறகு மின்கட்டணத்தை டவுன்லோட் செய்து பார்த்தபோது, 52 லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகையாகக் காட்டியது.

இதனையடுத்து, இது தொடர்பாக மின்துறை இளநிலை பொறியாளரை சந்தித்தேன். ஆனால் இதுவரை மின்சாரம் சீராகவில்லை. நான் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தி வருகிறேன். என் வீட்டில் நோயாளியும் இருக்கிறார். தற்போதுவரை எனது வீட்டிற்கு மின் இணைப்பு சீராகவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மின் துறையின் செயல் பொறியாளர் ஷர்வன் குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், “முசாபர்பூரில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பழைய மீட்டரின் அளவீடுகள் புதிய ஸ்மார்ட் மீட்டருக்கு மாற்றப்பட்டதால் இந்த முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். ரசீதில் பிழை இருப்பதாக நான் நினைக்கிறேன், அது சரி செய்யப்படும். ” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.