தற்செயலாக கிடைத்த புதையலை யாரேனும் வேண்டாம் எனச் சொல்லி போலீசிடம் ஒப்படைப்பார்களா? ஆனால் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த கட்டட தொழிலாளி தனக்கு கிடைத்த பிரிட்டிஷ் காலத்து வெள்ளி நாணயங்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக நடத்தப்பட்டு வரும் பணியின் போது 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர்கள் காலத்து வெள்ளி நாணயங்களை கண்டெடுத்திருக்கிறார் கட்டட தொழிலாளி.
கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கட்டடம் கட்டுவதற்கான தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு பணியாற்றிய போதுதான் தொழிலாளி ஹல்கே அஹிர்வார் என்பருக்கு பிரித்தானிய நாணயங்கள் கிடைத்திருக்கிறது.
கண்டறியப்பட்ட அந்த நாணயங்களை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு சென்றவருக்கு அந்த நாள் முழுவதும் தூக்கமே வராமல் போயிருக்கிறது. ஏனெனில் ஒருவேளை அதை பயன்படுத்தினால் சிறையில் தள்ளிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்திருக்கிறார் அஹிர்வார். ஆகையால் விடிந்ததும் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கண்டறிந்த வெள்ளி நாணயங்களை போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
படாபுரா பகுதியைச் சேர்ந்த அஹிர்வார் 1887 ஆண்டு பழமைவாய்ந்த 240 பிரிட்டிஷ் வெள்ளி நாணயங்களை தங்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் விஜய் ராஜ்புத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசியுள்ள அவர், “கடந்த செவ்வாயன்று (ஏப்.,18) வீடு ஒன்றில் மேற்கொண்ட தோண்டுதல் பணியின் போது கிடைத்ததாக அஹிர்வார் கூறினார். இந்த நாணயங்கள் விக்டோரியா மகாராணியின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை. ஒவ்வொரு நாணயங்களும் எண்ணூறு ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்டது என தற்காலிகமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் வருகிறது” எனக் கூறியிருக்கிறார். தற்போது அந்த நாணயங்கள் கோட்வாலி மாவட்ட நிர்வாகத்துறையிடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
முன்னதாக ஊடகத்திடம் பேசியுள்ள நாணயங்கள் எடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் மீனாட்சி உபாத்யார், “கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் குறித்து அஹிர்வார் எதுவுமே எனக்கு தெரியப்படுத்தவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட செய்தியை கண்டே அறிந்தேன்.” என்றிருக்கிறார்.