இந்தியா

சிஏஏவுக்கு எதிரான ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு

jagadeesh

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புது தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமான மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கே கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு மாணவர் காயமடைந்தார். தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவாறு கூச்சலிட்டுக் கொண்டே சென்றார்.

இவை அனைத்தும், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நடந்தது. அங்கிருந்த பலரும் மர்ம நபரின் செயலை வீடியோ எடுத்தனர். மாணவர்களை நோக்கி துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபரை போலீஸார் சுற்றி வளைக்காமல் அமைதியாக இருந்தது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பின்புதான், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் மாணவர்களை நோக்கி சென்ற மர்ம நபர் யாரென்று இதுவரை தெரியவில்லை. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.