இந்தியா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்: நோயுற்ற மனைவிக்காக வீட்டை ஐசியூவாக மாற்றிய கணவர்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்: நோயுற்ற மனைவிக்காக வீட்டை ஐசியூவாக மாற்றிய கணவர்

webteam

இந்த வயதான தம்பதிகளின் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றே சொல்லத் தோன்றுகிறது. தன் நோயுற்ற மனைவிக்காக வீட்டை அவசரச் சிகிச்சை யூனிட்டாக மாற்றிய கணவரின் பெயர் கியான் பிரகாஷ். அவர் ஒரு ஓய்வுபெற்ற பொறியாளர். வயது 74.

மத்தியப் பிரதேசம், ஜபல்பூரில் வசிக்கும் அந்தப் பொறியாளரின் மனைவி குமுதானி ஸ்ரீவஸ்தவா, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர். தன் மனைவியை வீட்டில்  வைத்தே சிகிச்சையளிக்க நினைத்த அந்த காதல் கணவர், தங்கள் வீட்டையே முழுமையான வசதிகளுடன் கூடிய ஐசியூ மருத்துவ அறையாக மாற்றிவிட்டார். ஒவ்வொரு நொடியும் மனைவிக்கு மருத்துவ உதவிகளை பேரன்புடன் செய்துவருகிறார் அவர்.

ஐசியூவாக மாற்றப்பட்ட அறையில் உறிஞ்சும் இயந்திரம், நெபுலைசர், காற்று சுத்திகரிப்பான் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகள் உள்ளன. அவருக்கு எந்த மருத்துவப் பயிற்சியும் கிடையாது என்றாலும்கூட, மனைவிக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் வழங்குகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமுதானி, ஒருகட்டத்தில் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறும் வகையில் ஐசியூவை உருவாக்கினார் கியான் பிரகாஷ். அவரது மனைவி நலம் பெறவேண்டி மக்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர். தனது காரையும்கூட அவர் ஆம்புலன்சாக மாற்றிவிட்டார்.

இந்த தம்பதியின் குழந்தைகள் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களது மகளும் மகனும் தினமும் வீடியோ கால் மூலம் பெற்றோர்களுடன் பேசிவருகிறார்கள்.