இந்தியா

ரெட் சிக்னலில் நிற்காமல் காரில்சென்ற நபர்-தடுத்து நிறுத்திய காவலரை காலணியால் தாக்கிய அவலம்

ரெட் சிக்னலில் நிற்காமல் காரில்சென்ற நபர்-தடுத்து நிறுத்திய காவலரை காலணியால் தாக்கிய அவலம்

Sinekadhara

புனே - அகமதாபாத் சாலையில் போக்குவரத்து காவலர் ஒருவரை நிர்வாகி ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மாலை 5 மணியளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து உதவி ஆய்வாளர் லஹானே கூறுகையில், ‘’வாகோலி பகுதியைச் சேர்ந்தவர் பால்கிருஷ்ணா ஜெயராம் தால்கே(32). இவர் கராதி பைபாஸில் சிக்னலில் நிற்காமல் தனது காரை ஓட்டிச்சென்றபோது கான்ஸ்டபிள் ஆனந்த் ராமசந்திர கோசாவி(43) தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் அவரிடம் லைசன்சை காட்டுமாறு கேட்டுள்ளார். லைசன்ஸ் இல்லாததால் அபராதம் விதித்துள்ளார்.

ஆனால் அதனைக் கட்டாமல் ஆத்திரமடைந்த தால்கே காரை விட்டு இறங்கி கோசாவியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், காக்கிச்சட்டையின் காலரை பிடித்து அவரிடம் சண்டையிட்டதுடன், சட்டையையும் கிழித்துள்ளார். தால்கேவை சமாதானப்படுத்த முயன்ற கோசாவியின் பேச்சை கேட்காமல், காலிலிருந்த ஷூவைக் கழற்றி, கோசாவியின் தலையில் அடித்துள்ளார். இதனைப்பார்த்த மற்ற இரண்டு போலீசார் விரைந்துசென்று தால்கேவை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

சிக்னலில் நிற்காமல் சென்றதுடன், பணியில் இருந்த காவலரின் காக்கிச்சட்டையை கிழித்தது மட்டுமன்றி, அவரை காலணியால் அடித்து தாக்கிய தால்கேவின் மீது, இந்திய சட்டப்பிரிவுகள் 353 (பொது ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுக்கும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி), 332 (அரசு ஊழியரைத் தன் கடமையிலிருந்து தடுக்கும் வகையில் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.