இந்தியா

கொளத்தூரில் அத்தையைக் கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது

கொளத்தூரில் அத்தையைக் கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது

PT

கொளத்தூரில் அத்தையைக் கத்தியால் குத்தி கொன்ற மருமகன் கைது

கொளத்தூரில் உறவினரைக் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற மருமகனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் குண சுந்தரி என்பவரை அவரது மருமகன் கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கொண்டமல்லி கிராமத்தில் பதுங்கியிருந்தார். இதனையடுத்து அங்குச் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த கணேஷை கைது செய்தனர்.


இதனையடுத்து அவரைச் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கணேஷ் கூறியதாவது “ எனக்கும் எனது உறவினரான அத்தை குண சுந்தரிக்கும் தவறான தொடர்பு இருந்தது. குணசுந்தரிக்குத் திருமணம் ஆன பிறகு நான் வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தனியாக வாழ்ந்து வந்தேன். அதனைக் குண சுந்தரியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதைக் காரணம் காட்டி அவர் எனக்குத் தொந்தரவு அளித்து வந்தார். இது மட்டுமல்லாமல் நான் அவருடன் பழக்கத்திலிருந்த போது அவர் எனக்குத் தந்து உதவிய பணத்தையும் திரும்பிக்கேட்டு தகராறு செய்தார். இந்தச் சமயத்தில் நாங்கள் புதியதாகக் குடியேறிய வீட்டைத் தெரிந்து கொண்ட சுந்தரி அங்கு வந்தும் தகராறில் ஈடுபட்டார். அப்போது எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் மூண்டது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான் அவரை காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டேன். கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை ரெட்டேரி அருகே கால்வாயில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டேன்” எனக் கூறினார்.

கணேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கணேஷை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.