குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் விராஜ் படேல். இவர் தன்னை குஜராத் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியாகவும், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டியின் (GIFT City) தலைவராகவும் காட்டிக்கொண்டு மும்பையை சேர்ந்த மாடல் பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார்.
மேலும் அப்பெண்ணிடம், ‘நான் தலைவராக இருக்கும் கிஃப்ட் சிட்டியில் பிராண்ட் அம்பாசிடராக உனக்கு வேலை வாங்கித் தருகிறேன். உன்னை திருமணமும் செய்து கொள்கிறேன்’ என உறுதியளித்து நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் அவரை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தியேட்டர் ஒன்றில் அப்பெண்ணுடன் படம் பார்க்க சென்றுள்ளார் விராஜ். அன்று அங்கிருந்த மற்றொருவருடன் ஏற்பட்ட சிறு தகராறொன்றில், வதோதரா காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். உடன் அந்த பெண்ணும் சென்றுள்ளார்.
அங்கு போலீசாரிடம், தான் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், தன்னுடன் வந்த பெண் கிஃப்ட் சிட்டியின் தலைவர் என்றும் கூறியிருக்கிறார் விராஜ் படேல். சந்தேகமடைந்த போலீசார் விராஜ் படேலிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அவர் கொடுத்த அடையாள அட்டையை ஆய்வு செய்த போலீசார், அது போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முதலமைச்சரின் அலுவலக அதிகாரி, கிஃப்ட் சிட்டியின் தலைவர் என்று கூறியதெல்லாம் பொய் என்பது அம்பலமானது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் விராஜ் படேல் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து விராஜ் படேல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கின் விசாரணையை நகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.