சமூக ஊடக கணக்குகளிலிருந்து பெண்களின் புகைப்படங்களை எடுத்து அவற்றை மார்பிங் செய்து, தொடர்புடைய பெண்களை மிரட்டி பணம் பறித்த 26 வயது இளைஞர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
போலியான நிர்வாணப் படங்களை தங்களுக்கு ஒரு நபர் அனுப்பி, அதை இணையதளத்தில் வெளியிடாமல் இருப்பதற்காக மிரட்டி பணம் கேட்பதாக, தெற்கு டெல்லியில் உள்ள சில பெண்களிடமிருந்து காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறும்போது, ‘’எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்த ஒரு நபர், போலியாக உருவாக்கப்பட்ட எனது நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாகவும், வெளியிடக் கூடாது என்றால் பணம் அனுப்புமாறும் மிரட்டினார். ஆனால் நான் பணம் எதுவும் அனுப்பவில்லை’’ என்று கூறினார்.
இதையடுத்து டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட மர்ம நபரை தேடிவந்தனர். இன்ஸ்டாகிராம் மற்றும் தகவல்தொடர்பு சேவை வழங்குனர் அளித்த விபரங்களைக் கொண்டு சுமித் ஜா என்ற 26 வயதான பட்டதாரி இளைஞரை பிடித்து விசாரித்ததில், போலியாக நிர்வாணப் படங்களை உருவாக்கி பெண்களை மிரட்டி வந்ததை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சுமித் ஜா மீது மிரட்டி பணம் பறித்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், சுமித் ஜா சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து பெண்களின் புகைப்படங்களை சேமித்து, அதை நிர்வாண படமாக மார்பிங் செய்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியப்படுத்துவார் எனவும் அதனடிப்படையில் பெண்களை மிரட்டி பணம் பெற முயற்சி செய்திருக்கிறார் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சுமார் 100 பெண்களை இவ்வாறு மிரட்டி பணம் கேட்டிருக்கிறார் எனவும் போலீசார் அதிர்ச்சி தெரிவித்தனர்.