இந்தியா

காங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது

காங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது

rajakannan

குஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

பிரியங்கா சதுர்வேதியின் 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது ட்விட்டரில்  மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தை காவல் நிலையங்களுக்கு சதுர்வேதி கொண்டு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

48 மணி நேரத்தில் நடந்தது என்ன?

  • @GirisK1605 என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பிரியங்கா சதுர்வேதியின் மைனர் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். 
  • திங்கட்கிழமை சதுர்வேதி மும்பை போலீசிடம் ட்விட்டர் மூலம் உதவியை நாடியுள்ளார். மும்பை போலீசார் கோர்கான் காவல் நிலையத்தை அணுகுமாறு கூறியுள்ளனர்.
  • கோர்கன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த கையோடு, டெல்லி போலீசுக்கும் தனது மகளுக்கு பாலியல் மிரட்டல் வருவது குறித்து மெயில் அனுப்பியுள்ளார். 

ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இரண்டு போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். மும்பை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  • ட்விட்டர் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசும் பாலியல் மிரட்டல் விடுத்தவரின் கணக்கு விவரங்களை கேட்டது. ட்விட்டர் அளித்த தகவலின் படி அகமதாபாத்தில் உள்ள அந்த நபரின் இல்லத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • அகமதாபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவ்லா பகுதியில் அந்த நபர் தங்கியிருக்கிறார். அவரது  பெயர் கிரிஷ் மகேஸ்வரி. சுமார் 7 வருடங்களாக அந்த பகுதியில் வசித்து வருகிறார். உணவு வேளாண்மை நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல், சொந்தமாக மளிகைக் கடை ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்.
  • அவரது ஃபேஸ்புக் கணக்கில் தன்னை ஒரு பாஜக ஊழியர் என்று கூறி கொண்டுள்ளார். இருப்பினும் பாஜக இன்னும் அதனை உறுதி செய்ததாக தெரியவில்லை. 

இதனையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார்.