இந்தியா

மன்னிப்பு கோரத் தேவையில்லை - மம்தாவை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

webteam

பிரபல ந‌‌டிகை பிரியங்கா சோப்ரா‌வின் பட‌த்து‌டன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பா‌னர்ஜியின் படத்தை இணைத்து மீம்ஸ் வெளியிட்டவ‌ர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‌ 

மேற்கு வங்க பாரதிய ஜ‌னதாவின் இளைஞரணி நிர்வாகி பிரிய‌ங்கா சர்மா என்பவர், அண்மையில்‌ நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா‌ பானர்ஜியின் படத்தை இணைத்து ச‌மூக வலைத்தளத்தில் மீம்ஸ் வெளியிட்டார். இதை‌த்‌தொடர்ந்து காவ‌‌ல்துறையினர் அவரைக் கைது செய்த நிலையில், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கை வி‌சாரித்த நீதிபதி இந்திரா பா‌னர்ஜி தலைமையிலான விடுமுறை கால உச்சநீதிமன்ற அமர்வு, எழுத்துப்பூர்வமாக மம்தா பானர்ஜியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அறிவுறுத்தி, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், திடீரென பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர் நீரஜ் கிஷண் கவுலை அழைத்‌‌‌‌த நீதிபதிகள், மம்தா பானர்ஜியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் செய்வதாகவும் , உடனடியாக அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடுவதாகவும் தெரிவித்தனர். 

முன்னதாக வழக்கு விசாரணையின் போது வாதாடிய பிரியங்கா சர்மாவின் வழக்கறிஞர், மன்னிப்பு கோர வேண்டும் என உத்‌தரவிடுவது, பேச்சுரிமைக்கு எதிரானதாக அமையும் எனத் தெரிவித்திருந்தார்.