INDIA கூட்டணிக் கட்சிகளின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக திரிணாமூல், காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழித்தார். மம்தாவின் கருத்திற்கு வைகோ, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவளித்தாக தெரிகிறது. ஆனால் மம்தாவின் கருத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில், “மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் மல்லிகார்ஜூன கார்கேவை INDIA கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், அதே சமயத்தில் பிரதமர் வேட்பாளராகவும் அடுத்து வரும் தேர்தலுக்காக வலியுறுத்தினர். மல்லிகார்ஜூன கார்கே உடனடியாக இதை நிராகரித்தார். இந்த ஆலோசனை தேவையில்லை. தேர்தலுக்கு பின்பே யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் என தெரிவித்தார்” என திருமாவளவன் தெரிவித்தார்.
கேரள காங்கிரஸ் தலைவர் ஜோசப் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், மம்தா பானர்ஜி தலித் பிரதமரை முன்னிறுத்தினால் நன்றாக இருக்கும் என்றுதான் தெரிவித்தார். யாருடைய பெயரையும் தெரிவிக்கவில்லை. மம்தா கடையியாக பேசியதால் அதிகம் விவாதிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் வெற்றிதான் முதல் இலக்கு என்றும் பிரதமர் யார் என்பது குறித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு ஜனநாயக ரீதியில் முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “முதலில் வெற்றி பெற வேண்டும். வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். யார் பிரதமர் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பிரதமரைப் பற்றி பேசி என்ன பயன். முதலில் வெற்றி பெற முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்,