இந்தியா

திரிணாமூலின் 'நம்பர் 2' ஆகிறாரா அபிஷேக்? - மருமகனை தேசிய பொதுச் செயலராக்கிய மம்தா!

திரிணாமூலின் 'நம்பர் 2' ஆகிறாரா அபிஷேக்? - மருமகனை தேசிய பொதுச் செயலராக்கிய மம்தா!

sharpana

எதிர்பார்க்கப்பட்டபடி, மேற்கு வங்கத்தில் டயமண்ட் ஹார்பர் தொகுதியும் எம்.பி.யும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனுமாகிய அபிஷேக் பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உயர் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று 3-வது முறையாக மம்தா ஆட்சி நடத்தி வரும் நிலையில், மம்தா பானர்ஜி தனது மருமகனும் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவரான அபிஷேக் பானர்ஜிக்கு கட்சியில் பெரிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதன்படி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியபொது செயலாளராக நியமித்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திரிணாமூல் கட்சி தொண்டர்கள் மத்தியில் அபிஷேக் பானர்ஜிக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்த வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று திரிணாமூல் கட்சி சார்பில் இன்று கொல்கத்தாவில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் கட்சியின் முதல் பெரிய கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்க அனைத்து மூத்த தலைவர்களையும் கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி நடந்த கூட்டத்தில் அபிஷேக் பானர்ஜியை தேசிய பொதுச் செயலராக நியமிக்க சம்மதம் தெரிவிக்கப்பட அதன்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை முறையாக வெளியிட்ட திரிணாமூல் மூத்த தலைவர் பார்தா சாட்டர்ஜி, ''எங்களது கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தான் அபிஷேக் பானர்ஜியை தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரைத்தார்" என்று கூறியுள்ளார். அபிஷேக் பானர்ஜி தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் வகித்து வந்த இளைஞர் பிரிவு தற்போது வங்க நடிகராக இருந்த அரசியல்வாதியாக மாறிய சயோனி கோஷ்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அபிஷேக் பானர்ஜி?

மம்தாவின் சகோதரர் அமித் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோரின் மகன்தான் இந்த அபிஷேக் பானர்ஜி. இப்போது 33 வயதாக இருக்கும் அபிஷேக் மம்தாவின் அரசியல் வாழ்க்கையின் நிழல்களில் வளர்ந்தவர். மூத்த வங்காள பத்திரிகையாளர்கள் மம்தாவின் காளிகாட் இல்லத்துக்குச் செல்லும்போதெல்லாம் 9-10 வயது இருக்கும் அபிஷேக் கிரிக்கெட் விளையாடுவதை சிலசமயங்களில் பார்த்ததாக நினைவுபடுத்துகிறார்கள். இதன்பின் தனது சிறுவயதில் அத்தை மம்தாவுடன் கட்சிக் மேடைகளில் அவ்வப்போது தென்படுவார் அவ்வளவுதான்.

டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் (ஐஐபிஎம்)-லிருந்து பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டங்கள் பெற்றிருக்கிறார் அபிஷேக் பானர்ஜி. 2009ல் எம்பிஏ முடித்த பிறகு அபிஷேக் பிஸினெஸில் ஈடுபட்டார். லீப்ஸ் & பவுண்ட்ஸ் இன்ஃப்ரா கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தபோதுதான் அபிஷேக்கின் அரசியல் என்ட்ரி. கட்சிக்குள் வளர்ந்து வரும் பவர் சென்டர்களை உடைக்க திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவர் அட்வைஸின் பேரில் கட்சிக்குள் நுழைக்கப்பட்டார் அபிஷேக்.

ஒரு சில ஆண்டுகள் கட்சிப் பதவியில் இருந்த நிலையில், 2014ல் தேர்தல் அரசியலில் கால் பதித்தார் அபிஷேக், 2014ல் டயமண்ட் ஹார்பர் நாடாளுமன்றத் தொகுதி காலியாக, கட்சித் தலைமை அபிஷேக்கை பொதுத் தேர்தலில் போட்டியிட வைத்தது. இதற்கு கை மேல் பலனாக வெற்றியும் கிடைத்தது. அபிஷேக் முதன்முதலில் எம்பி ஆனபோது அவருக்கு வயது 26. இப்படி படிப்படியாக கட்சிக்குள் நுழைந்த அபிஷேக் இப்போது மம்தாவின் அனைத்துமாக, நம்பிக்கையாக மாறினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திரிணாமூலின் 'நம்பர் 2' என்கிற அளவில் பேசப்பட்டார். அந்தத் தேர்தலில் மம்தாவின் பிரசாரம், வேட்பாளர் தேர்வு என அனைத்தும் அபிஷேக்கின் கண் அசைவிலேயே நடந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும், மம்தா வெற்றிபெற ஒரு காரணமாக இருந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது இந்த அபிஷேக்தான். பிரசாந்த் - அபிஷேக்கும் தற்போது நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். அபிஷேக்கின் சமீபத்திய ஆதிக்கத்தின் காரணமாக தான் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட திரிணாமூல் மூத்த தலைவர்கள் வெளியேறினர் என்று தேர்தலுக்கு முன்பு பேச்சுக்கள் எழுந்தது. இதனால் சட்டசபை தேர்தல் முன்னதாகவே அனைவரின் பார்வையும் அபிஷேக் மீது இருந்தது. அபிஷேக் மீது நிலக்கரி ஊழல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு