இந்தியா

3வது முறை முதலமைச்சரானார் மம்தா - பதவியேற்பு விழாவில் மரபை மீறினாரா ஆளுநர் ஜகதீப் தன்கர் ?

sharpana

மேற்குவங்க மாநில முதலமைச்சராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். விழாவில் ஆளுநர், மாநிலத்தின் சட்டம் ஒழங்கு பிரச்னை குறித்து முதல்வரிடம் பேசியது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

2011, 2016ஆம் ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மம்தா. எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஜகதீப் தன்கர், மம்தா பானர்ஜிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா பரவல் காரணமாக பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

நிகழ்ச்சியில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பீமன்போஸ், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவை பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா புறக்கணித்தது.

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஜகதீப் தன்கர், மாநிலத்தை கடுமையாக பாதிக்கும் வன்முறை கலாசாரத்தை முடிவு கட்ட மம்தா முன்னுரிமை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநிலத்தில் மம்தா சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலைநாட்டுவார் என நம்புவதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இந்நிலையில் பதவியேற்பு விழாவுக்கு பிறகு ஆளுநர் ஜகதீப் தன்கர், மாநிலத்தின் சட்டம் ஒழங்கு பிரச்னை குறித்து முதல்வரிடம் பேசியது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

வழக்கமாக முதல்வர் பதவியேற்பு விழாவின் போது, பதவியேற்பும், ரகசிய காப்பு பிரமாணமும் முடிந்த பிறகு ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே மரபு. ஆனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து மம்தா பானர்ஜியிடம் சில நிமிடங்கள் ஆளுநர் ஆலோசித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது