சந்தீப் கோஷ், மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை: Ex Dean-க்கு கடிதம் எழுதியிருந்த மம்தா? பாஜக குற்றச்சாட்டு.. CBI விசாரணை!

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. அந்த வகையில். கொலை செய்யப்பட்ட மருத்துவரின் மருத்துவமனையில் முன்னாள் முதல்வராகப் பணியாற்றிய சந்தீப் கோஷுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் ஒன்றை எழுதியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022, ஜூன் 30 என தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கோஷுக்கு அவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுடைய பிறந்த நாளில் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்பேரிலேயே சந்தீப் கோஷுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த விவகாரத்தை பாஜக பெரிய பூதாகரமாக்கியுள்ளது. இதுபற்றி பாஜக தலைவர்களில் ஒருவரான பிரியங்கா திப்ரிவால், “கண்காணிப்பு அறிக்கையை அடுத்து, அந்த மருத்துவமனையில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கண்டறிவதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் டாக்டர் சந்தீப் கோஷ் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. தொடர்ந்து பதவியை வகித்து வந்திருக்கிறார். இதுபோன்று கடித தொடர்பு உள்ள காரணத்தினாலேயே, கோஷ் பதவி நீக்கம் செய்யப்படவில்லை” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: மொத்த கடனும் அடைப்பு.. ஷாக் ஆன ஆர்பிஐ.. பக்கா பிளான் போட்ட டாடா குழுமம்!

இதற்கிடையே முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக அவருடைய அலுவலகம், வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய இந்தச் சோதனையில், பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல்வராக சந்தீப் கோஷ் இருந்தபோது கல்லூரியில் நடந்த பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு நடத்தி வந்த விசாரணையும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு புதிய தலைவலி சேர்ந்துள்ளது.

தவிர, கேட்பாரற்ற சடலங்கள் மற்றும் பயோமெடிக்கல் கழிவுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் சந்தீப் கோஷ் ஈடுபட்டு உள்ளார் என புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி, பழைய வழக்குகள் எல்லாம் சந்தீப் கோஷுக்கு எதிராக ஒன்று சேர்ந்திருப்பதால் அவர் மிகுந்த நெருக்கடியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!