இந்தியா

மக்களை பாஜகவுக்கு வாக்களிக்க வற்புறுத்துகிறதா சிஆர்பிஎஃப்? - மம்தா கிளப்பிய சர்ச்சை

மக்களை பாஜகவுக்கு வாக்களிக்க வற்புறுத்துகிறதா சிஆர்பிஎஃப்? - மம்தா கிளப்பிய சர்ச்சை

webteam

பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மத்திய பாதுகாப்பு படையினர் மக்களைக் கேட்டுக் கொண்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பேரணியில் பேசியவர், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் வாக்குச்சாவடிகளுக்குள் நுழைவதற்கு வாக்காளர்களைத் தடுப்பது, மக்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மத்திய பாதுகாப்பு படைகள் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்துகின்றனர். 'பாஜகவுக்கு வாக்களியுங்கள்' என்று மக்களிடம் சொல்ல மத்திய படைகளை கேட்டவர் யார்? அவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்?

நடந்து வரும் தேர்தல்களில் மாநிலத்தில் இதுவரை 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பணியில் இருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, பெண்களை பணியில் இருக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வழக்குகள் பதிவாகியுள்ளன.

எங்களைப் பொறுத்தவரை தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். வாக்களிக்கச் செல்லும் மக்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் தொந்தரவு செய்யக்கூடாது. உண்மையான சிஆர்பிஎஃப் வீரர்களை நான் மதிக்கிறேன். ஆனால், தொல்லைக் கொடுக்கும், பெண்களைத் தாக்கும், மக்களை துன்புறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎஃப் வீரர்களை நான் மதிப்பதில்லை.

சிஆர்பிஎஃப் வீரர்களின் மிரட்டல்களில் இருந்து வாக்காளர்கள், குறிப்பாக பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். மத்திய படைகள் பெண்கள் வாக்களிக்காமல் பார்த்துக்கொள்ள கிராமங்களுக்குச் செல்கின்றன. எனவே, என் தாய்மார்களே, நீங்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறப்பட்டால், நீங்கள் கேட்பீர்களா? துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை விட ஒரு வாக்கு முக்கியமானது" என்று மம்தா கூறியுள்ளார்.

மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. "சட்டம் - ஒழுங்கு பிரச்னையை உருவாக்க மம்தா பானர்ஜி முயல்கிறார். எங்கள் சொந்த பாதுகாப்பு படையினருக்கு எதிரான அறிக்கை தேசத்துரோகம் மற்றும் தேச விரோதமானது" என்று கூறியிருக்கின்றனர் பாஜகவினர்.

இதேபோல், மாநில பாஜக தலைவர் ஜெய் பிரகாஷ் மஜும்தார், ``வட பெங்கால் கூட்டத்தின்போது மம்தா இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டுமா? மத்திய படைகளுடன் அரசியலை தொடர்புபடுத்த முடியாது. இது நாட்டின் ஆன்மாவிற்கு எதிரானது. இந்த கேள்வியை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்துள்ளோம். மக்களைத் தூண்டும் இடத்தில் எந்த அரசியல் கட்சியும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லவில்லை. இதை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளார். இப்படி இந்த விவகாரம் மேற்கு வங்க மாநிலத்தில் புதிய சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. முதல் கட்டமாக மார்ச் 27-ஆம் தேதி 30 இடங்களுக்கும், 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 1-ஆம் தேதி 31 இடங்களுக்கும், 3-ஆம் கட்டமாக 6-ஆம் தேதி 31 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. இதையடுத்து வரும் 10-ஆம் தேதி 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு என வரும் 29 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.