இந்தியா

பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கிய மம்தா!!

பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கிய மம்தா!!

webteam

பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் பேருந்து சேவை போன்ற போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் ஊரடங்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

ரயில்களை மேற்கு வங்கம் அனுமதிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா எனக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். ஒரு முதலமைச்சராகிய என்னிடம் அவர் நேரடியாக பேசலாம். அந்தக் கடிதத்தை ஊடகங்களுக்கும் அனுப்பி உள்ளார். இங்குள்ள மக்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆதரமில்லாத குற்றச்சாட்டுகளை எழுதி ஊடங்களுக்கு அனுப்பியது அதிருப்தி அளிக்கிறது.

அரசியல் ரீதியாக மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள், முடிவுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதி்க்க வேண்டும். அந்தந்த மாநில அரசுகளுக்கே அந்த மாநில நிலவரங்கள் தெரியும். ஒருபுறம் ஊரடங்கை தீவிரப்படுத்துமாறு கூறும் மத்திய அரசு மறுபுறம் ரயில் சேவைகளை தொடங்குகிறது. இது முரணாக இருக்கிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் மத்திய அரசு ரயில் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. அவர்களிடம் பணமில்லை. உங்களுக்கு பணம் வேண்டுமென்றால் எங்களிடம் கேளுங்கள். நாங்கள் தருகிறோம். கொரோனா வெளி நாடுகளில் இருந்து பரவியது நமக்கு தெரியும், ஆனாலும் நாம் மற்ற நாடுகளை சுட்டிக்காட்டவில்லை. அப்படி இருக்கையில் நாம் நம் மாநிலங்களையோ, நம் மக்களையுமே எப்படி சுட்டிக்காட்ட முடியும்?” எனத் தெரிவித்தார்.