மம்தா பானர்ஜி எக்ஸ் தளம்
இந்தியா

”இது நடக்கும்.. பாஜக தானாகவே உடையும்” - ஆருடம் கூறிய மம்தா பானர்ஜி!

”I-N-D-I-A கூட்டணி விரைவில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்” என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Prakash J

18வது மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கிறது. பிரதமராக மோடி, நாளை (ஜூன் 9) பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ”I-N-D-I-A கூட்டணி விரைவில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும்”என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”400 இடங்களில் வெல்வோம் என்றவர்களால் தனிப்பெரும்பான்மைகூட பெற முடியவில்லை. I-N-D-I-A கூட்டணி இப்போது ஆட்சியை அமைக்க உரிமை கோரவில்லை என்பதற்காக அது நடக்காது என்று இல்லை. சில அரசுகள் ஓரிரு நாட்கள் மட்டுமேகூட இருந்துள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இந்த அரசு 15 நாட்கள் நீடிக்குமா, இல்லை அதற்குள் கவிழுமா என்பது யாருக்குத் தெரியும்? என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

நேரம் வரும்போது I-N-D-I-A கூட்டணி ஆட்சி அமைக்கும். அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான, சட்டவிரோதமாக ஆட்சி அமைக்க பாஜக முயல்கிறது. அதற்கு என்னால் வாழ்த்து சொல்ல முடியாது. பெரும்பான்மையான மக்கள் பாஜகவை நிராகரித்தே உள்ளனர். அதேநேரம் எனது வாழ்த்துகள் இப்போது தேர்வான அனைத்து எம்.பிக்களுக்காகவும் நாட்டுக்காகவும் இருக்கும். அவர்கள் கட்சிகளை வலுப்படுத்துவார்கள். பாஜகவை நாங்கள் உடைக்க மாட்டோம். ஆனால் அந்தக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும். அது ஏற்கெனவே ஏற்பட ஆரம்பித்துவிட்டது போலவே தெரிகிறது. பாஜகவில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது பார்த்தாலே தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:ஒடிசா தேர்தல் தோல்வி| வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் கட்சியினர்.. விளக்கமளித்த நவீன் பட்நாயக்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மம்தா பானர்ஜியும், மக்களவைக் குழுத் தலைவராக சுதீப் பந்த்யோபாத்யாயும், மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதாரும், மக்களவை கொறடாவாக கல்யாண் பானர்ஜியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸும், 12 இடங்களில் பாஜகவும், 1 இடத்தில் காங்கிரஸும் வெற்றி பெற்றிருந்தன. பாஜக கடந்த முறை 18 இடங்களில் வென்றநிலையில் இந்த முறை 6 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸிடம் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்கள் ஆவர். மஹுவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், சாயோனி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய், பிரனடி சுஷில் குமார், பிரியங்கா ஜார்கிஹோலி, சுதா ராமகிருஷ்ணன், சுஜாதா மண்டல் ஆகிய 12 பேர் போட்டியிட்ட நிலையில், சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். மீதம் உள்ள 11 பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்று எம்பிக்கள் ஆகி உள்ளனர்.

இதையும் படிக்க: லோக் சபா தேர்தல்| பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு.. தவறை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்!