மம்தா பானர்ஜி PT desk
இந்தியா

‘அந்த கருவி இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்’ - மத்திய அமைச்சரை அருகே வைத்து மம்தா சாடல்!

ரயில்வே துறையானது தனது குழந்தை போன்றது என்றும், அதனால் ஆலோசனைகள் வழங்க தயாராக இருப்பதாகவும், அரசியல் செய்ய இது நேரமில்லை எனவும் மத்திய ரயில்வே துறை முன்னாள் அமைச்சரும், தற்போதைய மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சங்கீதா

ஒடிசாவின் பாலசோரில், ஷாலிமர்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு மற்றும் பெங்களூரு-ஹவுரா அதிவிரைவு பயணிகள் ரயில்களுடன், ஒரு சரக்கு ரயிலும் மோதி, கவிழ்ந்து மூன்று ரயில்களும் நேற்றிரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளாகின. இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Balasore Train Accident

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகையே இந்தச் சம்பவம் உலுக்கியுள்ள நிலையில், விபத்து நடந்தப் பகுதிக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, விபத்து நடந்தது குறித்து கேட்டறிந்தார். பின்னர், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவர் சந்தித்துப் பேசினார்.

விபத்துக்கான காரணம்:

இதனைத் தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை பக்கத்தில் வைத்துக்கொண்டே செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். அப்போது மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது, “நான் பார்த்ததில் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்தாக இது உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட இருக்கிறது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உள்ளோம். விபத்து நடந்த இடத்தில் பணிகள் முடியும் வரை மத்திய ரயில்வே மற்றும் ஒடிசா அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

கோரமண்டல் விரைவு ரயிலில், விபத்து தடுப்பு கருவி (anti-collusion device) இல்லை. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஒரே தண்டவாளத்தில் ஓடும் ரயில்களை குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தும் வகையில் விபத்து (மோதல்) தடுப்பு கருவியை அறிமுகப்படுத்தினேன். இப்போது, நீங்கள் (அஷ்வினி வைஷ்ணவ்) இங்கே இருக்கும் போது இதனை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், அதாவது இந்த ரயிலில் விபத்து தடுப்பு கருவி எதுவும் இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன். இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.

Balasore Train Accident

தற்போது எல்லாம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. ரயில்வே துறை என்னுடைய குழந்தை போன்றது. ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில், நான் என்னுடைய ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி

கடந்த 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை 2000ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். அப்போது தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு ஏராளமான விரைவு ரயில்களை அறிமுகப்படுத்தினார்.

அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு இரண்டாவது முறையாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், 2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்பதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.