இந்தியா

மேற்கு வங்கம்: 210-க்கும் மேற்பட்ட இடங்களை வசப்படுத்தும் மமதா கட்சி!

மேற்கு வங்கம்: 210-க்கும் மேற்பட்ட இடங்களை வசப்படுத்தும் மமதா கட்சி!

Veeramani

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜகவால் திரிணாமூல் காங்கிரஸ்க்கு கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மம்தா மீண்டும் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளார். 213 இடங்களை வசப்படுத்தும் நிலையில் அவரது கட்சி உள்ளது.

மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் பாஜகவில் இணைந்தனர். இதனால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. தற்போது வெளியான தேர்தல் முடிவுகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களிலும், பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையை பெற்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஆனால் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் அக்கட்சி வலுவான எதிர்கட்சியாக அமரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. கடந்த முறை 26 தொகுதிகளில் வென்றிருந்த சிபிஎம் மற்றும் 44 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் ஒரு சில இடங்களிலேயே முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தை எப்படியேனும் கைப்பற்றிட பாஜக பல வியூகங்களை வகுத்து, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா நேரடியாக பலமுறை பரப்புரை செய்தனர். தேர்தல் பரப்புரையின்போது காலில் காயம் ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மம்தா பானார்ஜி.