இந்தியா

தடகள வீராங்கனை வீட்டில் மரக்கட்டை பதுக்கல்: சோதனை செய்த அதிகாரி பணியிட மாற்றம்

தடகள வீராங்கனை வீட்டில் மரக்கட்டை பதுக்கல்: சோதனை செய்த அதிகாரி பணியிட மாற்றம்

jagadeesh

மேற்கு வங்காளத்தில் மரக்கட்டைகள் பதுக்கல் விவகாரத்தில் தடகள வீராங்கனை வீட்டில் சோதனை செய்த அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்வப்னா பர்மன். தடகள வீராங்கனையான ஸ்வப்னா கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசியப் போட்டிகளில் கலந்துக் கொண்டு தங்கம் வென்றவர். அர்ஜுனா விருது பெற்றவரான இவரது வீட்டில் கடந்த 13 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில், மரக்கட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மரக்கட்டைகளை வாங்கியதற்கான பில் உள்ளிட்ட உரிய ஆவணங்களை ஸ்வம்பனாவால் அதிகாரிகளிடம் காட்ட முடியவில்லை. இந்நிலையில், ஸ்வப்னாவுக்கு ஆதரவாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

அதில் " ராஜ்பன்ஷி சமூகத்தின் சிறந்த வீரர் ஸ்வப்னா. நான் அவரை மதிக்கிறேன். வீடு கட்டுவதற்கு எப்படியோ அவர் மரக்கட்டைகளை வாங்கியுள்ளார். எங்களிடம் தெரிவிக்காமல் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றுள்ளனர். எங்களிடம் கேட்டு இருந்தால், நாங்கள் அனுமதி அளித்திருக்கமாட்டோம்" என தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சோதனை நடத்திய அதிகாரி சஞ்சய் தத்தாவை அரசு, பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. எனினும், அரசு உத்தரவை எதிர்த்து கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேர்மையாக கடமையை செய்த அதிகாரிக்கு இத்தகைய நிலையா என்று பொது மக்கள் கொதித்து எழுந்துள்ளனர்