ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி 2021 தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மம்தா, கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் பாஜகவும், புதுசேரியில் கடும் இழுபறி நிலவும் எனவும் கணிக்கப்ப்பட்டது.
2021ஆம் ஆண்டு தேர்தல்களில், ஏபிபி-சிவோட்டரின் கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றிபெறும் என்றும்,மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸும், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் வெற்றிபெறுவார்கள் என கணிக்கப்பட்டடுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் கணிக்கப்பட்டது. அதேநேரத்தில் அசாமில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தில், பாஜகவுக்கு ஓர் எழுச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸை பதவி நீக்கம் செய்ய இது போதுமானதாக இருக்காது. திரிணாமுல் காங்கிரஸுக்கு 154 முதல் 162 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பாஜக 98-106 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி 26-34 இடங்களை மட்டும் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. வாக்குப் சதவீத கணிப்பின்படி பாஜகவுக்கு 2016 தேர்தலில் பெற்ற 10.2 சதவீத வாக்குகளிலிருந்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 37.5 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 1.9 சதவீதம் குறைந்து 43 சதவீத வாக்குகளைப் பெறலாம். அதே நேரத்தில் இடது-காங்கிரஸ் கூட்டணி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 32 சதவீத வாக்குகளைப் பெற்றது, தற்போது அது 11.8 சதவீதமாக சரியக்கூடும்.
இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்த 18,000 பேரில், 48.8 சதவீதத்தைப் பெற்ற மம்தா பானர்ஜி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாஜகவின் மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷ் 18.7 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி 13.4 சதவீத பங்கைப் பெற்றுள்ளார்.
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பின்படி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 158-166 இடங்களுடன் வெற்றிபெற உள்ளது. இங்கு ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணி 60-68 இடங்களைப்பெற வாய்ப்புள்ளது. கமல்ஹாசனின் மநீம நான்கு இடங்களை வெல்லக்கூடும்; டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா தலைமையிலான அமமுக 2-6 இடங்களைப் பெறலாம் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் முதல்வர் பதவிக்கு 36.4 சதவிகித தேர்வுடன் ஸ்டாலின் பிரபலமான சாய்ஸ் ஆக இருக்கிறார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 25.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் 10.9 சதவீதம் பெற்றுள்ளார். அதேநேரத்தில் இந்த மாத இறுதியில் சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ள சசிகலாவுக்கு 10.6 சதவீத ஆதரவு உள்ளது. கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த் 4.3 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார், கமல்ஹாசன் 3.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். கருத்துக் கணிப்பாளர்களின் கூற்றுப்படி, கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை திமுகவுக்கு நன்மையாக முடிவடைகிறது; அதேநேரத்தில் அமமுகவின் வாக்குகள் அதிமுகவுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது.
கேரளாவில் 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இடது ஜனநாயக முன்னணி 80-89 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 49-57 வெற்றிபெறும். கேரளாவில் அதிகபட்சமாக இரண்டு இடங்களைப் பெற முடியும் என்பதால் பாஜக இந்தத் தேர்தலில்அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பினராயி விஜயன் (47%) காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி (22%) வாக்குகளை பெறுகிறார்கள்; எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா 4.1 சதவீத வாக்குகளையும், சுகாதார அமைச்சர் ஷைலஜா 6.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.
அசாமில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 73-81 இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் யுபிஏ 36 முதல் 44 இடங்களில் வெற்றிபெறும். கருத்துக்கணிப்பு ஏஐயுடிஎஃப்-க்கு 5-9 இடங்கள் கிடைக்கிறது (கணிக்கப்பட்ட வாக்குப் பங்கு 8.2%), இக்கட்சியுடன் காங்கிரஸ் (34.9%) தேர்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. பாஜகவுக்கு 43.1 சதவீதம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, காங்கிரசும், ஏஐயுடிஎஃப்ம் ஒன்றிணைந்தால், அது அசாமில் கடுமையான போராட்டத்தைத் தரக்கூடும்.
புதுச்சேரியில் 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு 12-16 இடங்கள் கிடைக்கக்கூடும் என்பதால் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமிக்கு இது சிக்கலாகத் தெரிகிறது. என்.டி.ஏ 14-18 இடங்களையும், எம்.என்.எம் ஒரு இடத்திலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.