இந்தியா

1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய் 

1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய் 

webteam

சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு வரும் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக சீன அதிபர் ஸி ஜின்பிங் நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். இந்தச் சந்திப்பிற்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் 1956ஆம் ஆண்டு சீன பிரதமர் சூ என்லாய் (Zhou Enlai) தமிழ்நாடு வந்து மாமல்லபுரம் சென்றது குறித்து சற்று திரும்பி பார்ப்போம். இதுதொடர்பாக ‘தி இந்து’ பத்திரிகையின் ஆர்கைவ்ஸ் (Archives) செய்தி உள்ளது. அதன்படி சீன பிரதமர் சோவ் என்லை 1956ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சென்னை வந்தார். இவரை மீனம்பாக்கம் விமான    நிலையத்தில் அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா வரவேற்றார். இதன்பின்னர் அவர் இன்றைக்கு நேரு உள்விளையாட்டு அரங்கமாக உள்ள இடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். 

இதனைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையிலுள்ள ஐசிஎஃப் வளாகத்தை பார்வையிட்டுள்ளார். ஐசிஎஃப் வளாகத்தின் வருகை பதிவேட்டில் சீன பிரதமர் சூ என்லாய் ,“இது ஒரு நவீன ரயில்வே தயாரிப்பு நிறுவனம். சீனர்கள் இங்கு வந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிறுவனம் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு அளிக்கப்படும் பயிற்சியும் சிறப்பாக உள்ளது” என எழுதியிருந்தார். 

இதன்பிறகு சீன பிரதமர் சூ என்லாய்  மாமல்லபுரத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டார். பின்னர் டிசம்பர் 7ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து புறப்பட்டார். மாமல்லபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்களுக்கும் சீனாவிற்கும் 8ஆம் நூற்றாண்டு முதல் வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.