பாதிக்கப்பட்ட நபர்கள் pt web
இந்தியா

வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுத்த GT MALL... அதிரடியாக மூட உத்தரவிட்ட கர்நாடக அரசு..

கர்நாடகத்தில் வேட்டி கட்டியவருக்கு அனுமதி மறுத்த வணிக வளாகத்தை ஒருவாரம் மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Angeshwar G

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது ஜிடி மால். இங்கு முதியவர் ஒருவர் வேட்டி கட்டி வந்ததற்காக அவருக்கு அனுமது மறுக்கப்பட்டது சர்ச்சையானது. திரைப்படத்திற்காக முன்பதிவு செய்திருந்தும் அனுமதி மறுக்கப்பட்டு, அவரும் அவரது மகனும் வாயிலுக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக, மாலில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாலின் விதிமுறைகளின்படி, வேட்டி கட்டியவர்களுக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்புப் பணியாளர்கள் தெரிவித்ததும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இருந்தபோதும், தொலை தூரத்தில் இருந்து தாங்கள் வந்திருப்பதாகவும், உடனடியாக உடைகளை மாற்ற முடியாது என்றும் தந்தை மகன் இருவரும் தெரிவித்தனர். ஆனால், பாதுகாப்புப் பணியாளர்களோ மீண்டும் மீண்டும் பேண்ட் அணிந்து வருமாறு அறிவுறுத்தியதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது. வேட்டி கட்டிய நபர் அவமரியாதைக்கு உள்ளானதாகக் கூறி பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மாலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயி மற்றும் அவரது மகனிடம் மன்னிப்பு கேட்டனர்.

இந்நிலையில் விவசாய சங்கங்கள் இன்று காலை வணிக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாலின் நிர்வாகிகள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில்தான், வேட்டி கட்டிய விவசாயியை உள்ளே விட மறுத்த ஜிடி மாலை ஒரு வாரம் மூட அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கு அந்த வணிக வளாகம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.