இந்தியா

“கொரோனா பரவலால் கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்” - பிரதமர் கோரிக்கை

“கொரோனா பரவலால் கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்” - பிரதமர் கோரிக்கை

Veeramani

ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக் கொள்ள பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.

கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் கொரோனா பரவி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி கும்பமேளாவை முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஏப்பல் 30 ஆம் தேதிவரை கும்பமேளா திட்டமிட்ட நிலையில் பிரதமர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஜூனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர், “கும்பமேளாவை இப்போது கொரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்தும் குறியீடாக வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்” என கோரிக்கை வைத்தார்.

பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த் "பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது. கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்