மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, டிசம்பர் 27 ஆம் தேதியுடன் 41 நாள் மண்டல பூஜைக்காலம் நிறைவடைந்து அன்று நடை அடைக்கப்பட்டது. இந்த மண்டல பூஜைக் காலத்தில் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், டிசம்பர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் மகர விளக்கு பூஜைக் காலத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 3 மணி முதலே சபரிமலை சன்னிதானத்தின் பெரிய நடைப் பந்தலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று தரிசனத்திற்காக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 95 சதவீத பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் இரு முடியோடு 18 ஆம் படியேறி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் ஜனவரி 19 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதையடுத்து ஜனவரி 20 ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினர் தரிசனத்தோடு சபரிமலை நடை அடைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து சபரிமலை சன்னிதான சாவி பந்தள மகாராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.