new parliament  twitter page
இந்தியா

குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற கட்டடத்தில் ரூ.32 கோடிக்கு பராமரிப்புப் பணிகள்!

குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Prakash J

புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த மே மாதம் 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது. எனினும், பணிகள் முழுமையாக முடிவடையாததால் ஆகஸ்ட் மாதம் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கியது.

அந்த சிறப்புக் கூட்டத்தின்போது, புதிய கட்டடம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே வார்த்தைப் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது. எனினும் அப்போதே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், விரைவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, புதிய கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்ய 32 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாற்காலிகளைச் சரிசெய்வது, பிளம்பிங், பாதுகாப்புப் பணிகளுக்கு 6.64 கோடி ரூபாயும், உடைந்த டைல்களை மாற்றுவதற்கு 5.99 கோடி ரூபாயும், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 20 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய கட்டடத்தில் கழிப்பறைகளும் கட்டி முடிக்கப்பட்டு வருகின்றன. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மக்களவையில் உள்ள ஆதாரங்களின்படி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்களவையின் ஆதாரங்களின்படி, சிறிய மாற்றங்களைத் தவிர, புதிய கட்டடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக இந்தப் பராமரிப்புப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.