பணிப்பெண் ஒருவர் தான் பணிபுரியும் வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர்களுடன் ஊதியம் குறித்து வாதிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களின் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்துள்ளார். அப்பெண் தான் பணிபுரிந்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர்களிடம் ஊதியம் தொடர்பாக வாதம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளன. அந்த காட்சிகளில், இளைஞர்கள் ஊதியத்தை வழங்கிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் அப்பெண் வழங்கவில்லை என்கிறார்.
அதற்கு விளக்கமளிக்கும் ஒரு இளைஞர், ரூ.500 நோட்டுகள் மூன்றும், பின்னர் ரூ.200 மற்றும் ரூ.100 நோட்டு என ரூ.300 வழங்கியதாகவும் கூறுகிறார். அதன்படி, தங்களுக்கு தரவேண்டிய ரூ.1,800 ஊதியம் தரப்பட்டுவிட்டதாக தெரிவிக்கிறார். அதை ஏற்க மறுக்கும் அப்பெண், நீங்கள் ரூ.1,500 மற்றும் ரூ.300 தந்தீர்கள், ஆனால் எனக்கு தரவேண்டியது ரூ.1,800 ஊதியம், அதை நீங்கள் தரவில்லை என்கிறார். அதற்கு மீண்டும் விளக்கமளிக்கும் இளைஞர் ரூ.1,500ம் ரூ.300ம் சேர்த்தால் ரூ.1,800 என்கிறார். ஆனால் அப்பெண் ரூ.1,500ம் ரூ.300ம் ரூ.1,800 அல்ல என்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ பலரும் நகைச்சுவை வீடியோ என தெரிவித்துள்ளனர். மேலும் அப்பெண்ணுக்கு கணக்கு தெரியவில்லை என்றும், அவருக்கு விளக்கிக்கூறுமாறு கூறியுள்ளனர். மேலும் சிலர் சினிமாவில் நகைச்சுவை காட்சிகளுடன் அதை ஒப்பிட்டுள்ளனர். பலர் அப்பெண்ணுக்கு நீதி வேண்டும் என நகைச்சுவையாக பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள மகாராஷ்டிர பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யஷோமதி தாகூர், “நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் அந்த உழைக்கும் பெண்ணை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். தவறாக கணக்கு கூறுவது ஒன்றும் நகைச்சுவை அல்ல” என்று கண்டிப்புடன் நெட்டிசன்களுக்கு பதிலளித்துள்ளார்.
மேலும், “பொருளாதார கல்வியறிவு தொடர்பான நிகழ்ச்சி பெண்கள் பொருளாதார மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. இது நமக்கு ஒரு சவால். விரைவில் அந்த நிகழ்ச்சியை இன்னும் விரிவாக்கம் செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.